இ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. முதலில், தலைநகர் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இருந்தது.

ஆனால்,போகப்போக தமிழகம் முழுவதுமே கொரோனா பரவலின் வேகம் அதிகரித்தது. இதை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், முதலில் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமலில் இருந்த போதும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. பலர் வேலையிழந்து தவித்தனர். இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை செய்தது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து, அந்த மண்டலங்களுக்கு இடையே அரசு,பேருந்து போக்குவரத்தை ஜூன் 1-ந்தேதி முதல் தொடங்கியது. ஒரு மண்டலத்திற்குள் சுமார் 5, 6 மாவட்டங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட மண்டலங்களில், மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. பொதுமக்கள் பிற மண்டலங்களுக்குள் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக இருந்ததால், பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டுமே இயங்கும் என்று மாற்றியமைக்கப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றவர்கள், மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிவர முடியாத நிலை ஏற்பட்டது. திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு மட்டுமே உரிய ஆவணங்களின் அடிப்படையில் இ-பாஸ் வழங்கப்படுகிறது. பிற விஷயங்களை காரணம் காட்டி விண்ணப்பிப்பவர்களுக்கு இ-பாஸ் மறுக்கப்பட்டுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போதைய நிலையில், சென்னை மாநகர எல்லைக்குட்ட பகுதிகளுக்கு வர விரும்புபவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் இ-பாஸ் வழங்கும் முறை இருந்து வருகிறது. திருமணம், மருத்துவம், இறப்பு போன்ற காரணங்களுக்குத்தான் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படுகிறதே தவிர, பிற காரியங்களுக்கான இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது.

இதனால், தற்போது சென்னை உள்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இ-பாஸ் வாங்கிக் கொடுக்கவே புதிதாக புரோக்கர்கள் கூட்டம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வாங்கிக்கொண்டு, திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு இ-பாஸ் வாங்கிக் கொடுக்க ஒரு கூட்டம் உருவாகி இருப்பதாகவும், போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுத்து சம்பாதிக்கும் மற்றொரு கும்பல் தலையெடுத்து இருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் இல்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தமிழக அரசு இ-பாஸ் முறை இம்மாதம் 31-ந்தேதி வரை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கனவே, 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கிவந்த தொழில் நிறுவனங்கள், தற்போது 75 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால், சொந்த ஊர்களுக்கு சென்ற பலர், பணிபுரியும் இடத்திற்கு செல்ல இ-பாஸ் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால், இ-பாஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதால், அவர்களும் புரோக்கர்களை நம்பி செல்ல வேண்டியுள்ளது.

தற்போது, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற ஊர்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் கார் மற்றும் வேன்களில் ரூ.3 ஆயிரம் கட்டணத்தில், இ-பாஸ் விண்ணப்பித்து அழைத்துவரும் சம்பவங்களும் தினமும் அரங்கேறிவருகின்றன. கடந்த மாதம் (ஜூலை) சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ-பாஸ் கேட்டு 5 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதில் 1½ லட்சம் விண்ணப்பங்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இ-பாஸ் பெறும் முறையை எளிதாக்க வேண்டும், அல்லது இ-பாஸ் முறையை மத்திய அரசு கூறியதுபோல் இரத்து செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Leave a Response