உழவர்களை ஒழிக்க மோடி அரசு திட்டம் – காவிரி உரிமைக்குழு போர்க்கோலம்

காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு கூட்டம், 13.06.2020 அன்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். கா.உ.மீ.கு. பொருளாளர் த.மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன், திருவாரூர் மாவட்டச் செயலாளர்
ச.கலைச்செல்வம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா.சின்னத்துரை, தஞ்சை மாவட்டத் தலைவர்
க.செகதீசன், பூதலூர் ஒன்றியத் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தஞ்சை மாவட்டச் செயலாளர் சைனுலாப்தீன், மனித நேய சனநாயக கட்சி மாவட்டச்செயலாளர் அகமது கபீர், மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் செம்மலர், காவிரி உரிமை மீட்புக் குழு சூனா செந்தில், தனசேகர், பார்த்திபன், வெள்ளாம்பெரம்பூர் இரமேசு, இலால்குடி நகர்ச் செல்லையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது :

தீர்மானம்

இன்று இந்தியாவின் உண்மையான தியாகிகள் உழவர்கள்தான்! இங்கு உள்நாட்டில் வாழும் உண்மையான அகதிகளும் உழவர்கள்தான். அரசியல் கட்சிகளிடம் அகப்பட்டுக் கொண்ட ஏமாளிகளும் அவர்கள்தான்!

கொரோனாக் கொடுங்காலத்திலும் ஆட்சியாளர்களால் குறிவைத்துத் தாக்கப்படுபவர்களும் உழவர்கள்தான்! உழவர்களிலும் தமிழ்நாட்டு உழவர்கள் என்றால் இனப்பாகுபாட்டுடன் தாக்குகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

காவிரி ஆணையத்தின் உரிமைப் பறிப்பு

ஊரடங்கும் வீடடங்கும் உச்சத்தில் இருந்த கடந்த ஏப்ரல் 2020 மாதத்தில், நரேந்திர மோடி ஆட்சி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னதிகாரத்தைப் பறிக்கும் நோக்குடன், அதைக் கொண்டு போய் நடுவண் நீராற்றல் துறையின் கீழ், ஓர் உறுப்பாக மாற்றி விட்டது.

உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 இல் அளித்த தீர்ப்பின்படி முழுநேரத் தலைவரும், தனி அலுவலகமும் உள்ள – தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அத்தீர்ப்பைச் சிதைக்கும் வகையில் நடுவண் அரசின் நீராற்றல் துறை ஆணையரின் கூடுதல் பொறுப்பாக, ஆணையத் தலைவர் பதவி குறுக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் அந்த ஆணையத்திற்கு இருக்க வேண்டும். அப்போதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாதந்தோறும் – வாரந்தோறும் தமிழ்நாட்டிற்குக் காவிரியில் வர வேண்டிய தண்ணீர் வரும்!

ஒப்புக்குப் போடப்பட்ட உதவாக்கரை ஆணையமாக அதை மோடி அரசு மாற்றி விட்டது.

வேளாண்மைக்கான கட்டணமில்லா மின்சாரம் இனி இல்லையாம்

இதே கொரோனா கொடுங்காலத்தில் மக்கள் குலைநடுங்கிக் கிடக்கும் வேளையில் உழவர்களின் குடலை உருவுவதைப் போல் – வேளாண்மைக்கான கட்டணமில்லா மின்சாரத்தை இரத்து செய்யும் சட்டத்தை முன் மொழிந்துள்ளது இந்திய அரசு.

மின்சார உற்பத்தியும் வழங்கலும் இனி மாநில அரசின் அதிகாரத்தில் இருக்காதாம்! அது நடுவண் அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு போகப்படுமாம்.

தமிழ்நாட்டில் உழவர் பெருந்தலைவர் ஐயா சி. நாராயணசாமி அவர்கள் தலைமையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து உழவர்கள் போராடியதால், அரசு எந்திரம் செயல்படாமல் முடங்கிப் போனது. ஆட்சியாளர்கள் ஈவு இரக்கமற்றுத் துப்பாக்கிச் சூடு நடத்தி உழவர்கள் பலரைக் கொன்றார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்களைச் சிறைகளில் அடைத்தார்கள். அவர்களின் போராட்டத்தின் – தியாகத்தின் பின்னணியில்தான் தமிழ்நாட்டில் வேளாண் பணிகளுக்குக் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள். அது இன்று வரை இங்கு செயல்பாட்டில் உள்ளது.

இப்போது நரேந்திர மோடி அரசு முன்வைத்துள்ள சட்டம், வேளாண் பணிகளுக்குக் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவது, ஏழைக் குடிசைகளுக்கு இலவச ஒற்றை விளக்கு மற்றும் வீடுகளுக்கு சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்குவது முதலிய அனைத்து உதவித் திட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறது. மாநில அரசு மின் கட்டணச் சலுகை அளிக்க விரும்பினால் அதற்குத் தனியே மானியம் அளிக்கலாம்; நேரடியாக மின் கட்டண நீக்கமோ சலுகையோ அளிக்கக் கூடாது என்று இப்புதிய சட்டம் கூறுகிறது.

உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு சந்தை மதிப்பைவிடப் பல மடங்குக் குறைவாக விலை நிர்ணயம் செய்கிறது இந்திய அரசு! வழிப்பறி செய்பவன் கடைசியில் இரக்கப்பட்டு கொஞ்சம் பணத்தைக் கொண்டு போ என்று சொல்லிவிட்டு பெருந்தொகையை எடுத்துச் செல்வது போன்ற நடவடிக்கை இது! கட்டணமில்லா மின்சாரம் அந்த இழப்பை சிறிதளவு ஈடுகட்டுகிறது. அதையும் இப்போது பறிக்கிறது மோடி ஆட்சி!

அதுமட்டுமல்ல, உழவர்களுக்கும் மற்ற மக்களுக்கும் மின் கட்டணம் பல மடங்கு உயரப் போகிறது. மின்சாரம் விற்கும் பொறுப்பை தனியார் பெருநிறுவனங்களிடம் விடப்போகிறது மோடி ஆட்சி!

மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் இந்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்காமல் – உழவர்களுக்குக் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என்று மட்டுமே தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

உழவர்களின் எதிர்காலத்தை இருட்டாக்கப் போகிறது இந்திய அரசு!

முடமாக்கும் மூன்று சட்டங்கள்

இந்திய அரசு கடந்த 03.06.2020 அன்று மூனறு அவசரச் சட்டங்கள் இயற்றியது. இம்மூன்றும் உழவர்களின் வாழ்வை முடித்து வைத்து விடும் அளவிற்கு ஆபத்தானவை.

1.இன்றியமையாப் பொருட்கள் பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை நீக்கி விட்டது.

2.வேளாண் விளை பொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம்.

3.உழவர்கள் மற்றும் பண்ணைச் சேவைகள் ஒப்பந்தச் சட்டம்.

இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

நெல் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை இனி அரசு கொள்முதல் செய்யாது. இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விலை அதிகம் கிடைப்பதற்கேற்ப உழவர்கள் விற்றுக் கொள்ளலாம் என்கிறது.

நெல், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை உழவர்கள் கடும் நெருக்கடிக்கு இடையிலும் கடுமையாக உழைத்து உபரியாக உற்பத்தி செய்து வருகிறார்கள். வெளிநாடுகளுக்குத் தாராளமாக ஏற்றுமதி செய்யும் வணிக ஏற்பாட்டை இந்திய அரசு உரியவாறு செய்யாததால், மிகை உற்பத்தியில் சிக்கி உணவு தானியங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்படுகின்றன. அரசு கொள்முதல் செய்யவில்லை என்றாலும் அடிமாட்டு விலையும் கிடைக்காது.

அடிமாட்டு விலையும் கிடைக்காதென்றால், உழவுத் தொழிலிலிருந்து உழவர்களே விலகிக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது மோடி அரசு. அதற்காகத்தான் “உழவர்கள் மற்றும் பண்ணைச் சேவைகள் ஒப்பந்தச் சட்டம்” கொண்டு வந்திருக்கிறது.

பெருங்குழுமங்கள், ஆயிரம் ஏக்கர் – பத்தாயிரம் ஏக்கர் என்று பண்ணை நடத்த அனுமதிக்கப் போகிறார்கள். அவர்களிடம் உழவர்கள் தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டு விட வேண்டும். விளைச்சலுக்கு ஏற்ப, விலைவாசிக்கேற்ப பெருங்குழுமங்கள் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயம் செய்யும். உழவர்கள் அதை வாங்கிக் கொண்டு மேலும் ஓட்டாண்டி ஆக வேண்டும் என்பதுதான் இச்சட்டத்தின் சாரம். காலப்போக்கில் அப்பெருங்குழுமங்களிடம் தங்கள் நிலங்களை உழவர்கள் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட வேண்டும்!

இதுபோன்று தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஒன்றை இயற்றி வைத்துள்ளது.

கொள்முதல் விலையா? கொலையறுக்கும் விலையா?

நெல், கோதுமை, பருத்தி, நிலக்கடலை, கரும்பு என எல்லா வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கும் இந்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கும் சந்தையில் இதரப் பொருட்களின் விலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அவ்வளவு படுமோசமாக அடிமாட்டு விலையை ஆண்டு தோறும் நிர்ணயிக்கிறது இந்திய அரசு.

இப்போது 2020 – 2021க்கான வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் விலையை அதே அடிமாட்டு பாணியில் இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 53 ரூபாய் உயர்த்தி விலை அறிவித்துள்ளது. ஒரு குவிண்டால் சாதா ரக நெல் ரூ. 1,868.00. சன்னரக நெல் ரூ. 1,888.00.

எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய உழவர் ஆணையம் (2004) சாகுபடிச் செலவுடன் அதில் 50 விழுக்காட்டுத் தொகையைச் சேர்த்து வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

சாகுபடிச் செலவு என்பதைப் பின்வருமாறு வரையறுத்தார் எம்.எஸ். சுவாமிநாதன் :

இடுபொருள் + உழவுத் தொழிலாளர் கூலிச் செலவு + சொந்த நில உழவர் அல்லது குத்தகை உழவர் குடும்ப உழைப்புக்கான கூலி + நிலத்தின் வளத் தேய்மானம் அடைவதை ஈடுகட்டுவது + உழவுக் கருவிகள் தேய்மானம் அடைவதை ஈடு கட்டுவது + சாகுபடி முதலீட்டிற்கான வட்டி முதலியவற்றின் கூட்டுத் தொகையே சாகுபடிச் செலவு.

இந்தச் சாகுபடிச் செலவையுமே் இதில் பாதித் தொகையையும் கூட்டி – வேளாண் விளை பொருளுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.

இந்தக் கணக்குப்படி இப்போது விலை நிர்ணயித்தால் நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு மூவாயிரம் ரூபாய் விலை நிர்ணயித்துக் கொள்முதல் செய்ய வேண்டும்.

இதேபோல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை முதலிய மற்ற விளை பொருட்களின் விலையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

ஒரு குவிண்டால் நெல்லுக்கு உழவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள். அதனால் இந்தியாவிலேயே உண்மையான தியாகிகள் உழவர்கள் என்று சொல்கிறோம்!

ஒருங்கிணைந்து போராடுவோம்!

இந்த நாட்டில் உழவர்களுக்கு ஆபத்து வருகிறதென்றால் அது அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் வருகின்ற ஆபத்து என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1.அரசு உணவுப் பொருள் கொள்முதல் செய்யவில்லை என்றால் என்ன பொருள்? ஞாய விலைக் கடைகள் இருக்காது என்று பொருள்!

2.உழவர்களுக்கான கட்டணமில்லா மின்சாரத்தைப் பறிக்கிறதென்றால் – ஒட்டுமொத்த நாட்டிற்கும் மின்சாரக் கட்டணம் கிடுகிடுவென உயரும் என்று பொருள்! ஏனெனில் மின்சாரம் வழங்குவதைத் தனியார் வசம் ஒப்படைக்கப் போகிறது இந்திய அரசு!

3.உழவர்களின் நில உரிமையை – நில உடைமையைப் பறித்துப் பெருங்குழுமங்களிடம் – கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்கப் போகிறது என்றால் என்ன பொருள்? தெருவோர மற்றும் சிறிய – நடுத்தர வணிகர்களின் வாழ்வைப் பறித்து, அமெரிக்கா போல், ஐரோப்பா போல் வணிகத்தைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப் போகிறது என்று பொருள்!

பெருங்குழுமங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் நடத்தும் வேட்டைப் பொருளாதாரத்தால் – அவர்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விடுவதால், அக்கடன்களை இந்திய ஆட்சியாளர்கள் பல இலட்சம் கோடி ரூபாயை – அடிக்கடி தள்ளுபடி செய்வதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் – பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு முதலியவற்றால் பெரும் சேதங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

அப்போதெல்லாம் – இந்தியா திவாலாகிவிடாமல் – இந்திய மக்கள் பட்டினிச் சாவில் படுகொலை ஆகாமல் பாதுகாத்து வருவது உழவர்களின் உற்பத்திப் பெருக்கம்!

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கொரோனா பொது முடக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் திவாலாகித் திகைத்து நிற்கிறது. இந்த நிலையில் இந்திய மக்களையும் இந்திய அரசையும் பாதுகாத்து வைத்திருப்பது இந்தியா முழுவதுமுள்ள உழவர்கள் உபரியாக உற்பத்தி செய்து வைத்த உணவு தானியங்கள்! இந்தப் பொது முடக்கத்திலும் கிராமங்களில் அன்றாடம் உற்பத்தியாகி, நகரங்களுக்கு மலிவு விலையில் வரும் காய்கறிகள்! கிராம மக்கள் வளர்க்கும் ஆடு மாடு கோழிகள்!

அப்படிப்பட்ட உழவுத் தியாகிகளை நிலத்தைவிட்டு வெளியேற்றும் சூழ்ச்சி நடக்கிறது. உழவர்களைக் காப்பது ஒட்டுமொத்தமாக மக்களைக் காப்பது ஆகும்!

ஒருங்கிணைந்து போராடுவோம்!

இந்திய அரசே,

1.காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுநேரத் தலைவரும், தனி அலுவலகமும் கொண்ட தன்னாட்சி அதிகாரமுள்ள ஆணையமாகச் செயல்படுத்து!

2.தமிழ்நாடு அரசின் மின்சார அதிகாரத்தைப் பறிக்காதே!

3.வேளாண்மைக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்படும் கட்டணமில்லா மற்றும் சலுகைக் கட்டண மின்சாரத்தை இரத்து செய்யாதே!

4.வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் கொள்கையை இரத்துச் செய்யாதே!

வேளாண் பொருள் வணிகத்தைப் பெருங்குழுமங்களிடம் (கார்ப்பரேட்டுகளிடம்)
ஒப்படைக்காதே!

5.நியாய விலைக் கடைகளை முடக்காதே! மூடாதே!

6.எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த கணக்கின்படி நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ. 3,000 நிர்ணயம் செய்! இதேபோல் அந்த ஆணையக் கணக்குப்படி கரும்பு, பருத்தி, நிலக்கடலை, உளுந்து, சோளம் அனைத்துக்கும் புதிய விலை நிர்ணயம் செய்!

7.பெருங்குழுமங்களிடம் உழவர்கள் நிலத்தை ஒப்படைக்கும் ஒப்பந்தத் திட்டத்தைக் கைவிடு!

8.கடந்த 03.06.2020 அன்று பிறப்பித்த வேளாண்மை – விற்பனை தொடர்பான மூன்று அவசரச் சட்டங்களையும் இரத்து செய்!

9.தமிழ்நாடு அரசே, மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற இந்திய அரசுக்கு அழுத்தம் கொடு!

10.உழவர்களின் அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!

மேற்கண்ட கோரிக்கைகளை விளக்கி, முதல் கட்டமாக, கிராமம் கிராமமாகச் சென்று உழவர்களிடம் பரப்புரை மேற்கொள்வதென்று காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Response