தெலங்கானாவைப் பின்பற்றுங்கள் – தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் அண்டைமாநிலமான தெலங்கானாவில் பத்தாம் வகுப்புத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது. அதன்விவரம்….

ஐதராபாத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கல்வித் துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, அரசு முதன்மை செயலாளர் சோமேஷ்குமார், கல்வித் துறை சிறப்பு செயலாளர் சித்ரா ராமச்சந்திரன், முதல்வர் அலுவலக முதன்மை செயலாளர் எஸ்.நர்சிங் ராவ் ஆகியோருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் 10 ஆம் வகுப்புத் தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்து இன்டர்மீடியட் உயர்க் கல்விக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் காலாண்டு அரையாண்டு மற்றும் தேர்வுக்கு முந்தைய மாதிரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெறச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 903 மாணவ,மாணவிகள் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுத இருந்தனர். மொத்தம் 6 பாடத்தில், 11 தாள்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது. அவற்றில் 2 பாடங்களுக்கான 3 தாள்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்வுகளை அரசு ஒத்திவைத்தது.

இந்நிலையில் ஒத்திவைக்கப் பட்ட தேர்வுகளை ரத்து செய்துஇதற்கு முன்பு பள்ளிகளில் நடத்தப்பட்ட உள் மதிப்பீட்டுத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை உயர் வகுப்புக்கு அனுப்ப முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்தார்.

தெலங்கானா முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பகிர்வில்,

3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே பத்தாம் வகுப்புக்கு தேர்வு இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலுங்கானா முதல்வர் காட்டும் வழியையாவது எடப்பாடி பழனிச்சாமி பின்பற்ற வேண்டும்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Response