காட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்

2020 ஜூன் 4-ஆம் தேதி தொல்.திருமாவளவன் தலைமையில்இணைய வழியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…….

1. பிற மாநிலங்களில் வேலைக்குப்போய் அல்லல்பட்டுத் திரும்பியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக ரூபாய் 10,000 அளிக்க வேண்டுமெனத் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2. புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண தேசிய அளவில் அவர்களுக்கென ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும்; அவர்களுக்குப் பாதுகாப்பான சட்டம் ஒன்றை உடனடியாக இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3. வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு நேரடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியும் கூட, இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. உடனடியாக அவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வங்கிக் கணக்கில் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

4. ‘காட்மேன்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப்பற்றி அவதூறு செய்திருப்பதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி அதை ஒளிபரப்பவிடாமல் தடை செய்தும்; அதன் தயாரிப்பாளர்,இயக்குனர் ஆகியோருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டும் சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கருத்துச் சுதந்திரம் குறித்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் அந்தத் தொடரை வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும், தயாரிப்பாளர் இயக்குனர் உள்ளிட்டவர்களுக்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

கோவையில் வழிபாட்டுத் தலத்தில் பன்றி மாமிசத்தை வீசி மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சித்த சனாதனப் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த நபரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்யவேண்டுமெனவும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

5. மருத்துவ படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே 2019 ஜூன் 28 அன்று விசிக சார்பில் மத்திய அமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது. தற்போது திமுக, இடதுசாரிகட்சிகள் உள்ளிட்ட ஏராளமான அரசியல்கட்சிகள் இக்கோரிக்கையை வலியுத்திவருகின்றன. எனவே,
இந்திய அளவில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ளதுபோல் இட ஒதுக்கீடு வழங்க உடனடியாக ஆணை பிறப்பிக்கும் படி மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அத்துடன், இதை வலியுறுத்தி தமிழகஅரசு அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

6. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் கட்டத்தை அடைந்து விட்ட நிலையில் சென்னையில் மட்டும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். சென்னையில் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை முழுமையாகத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவித்து நூறு விழுக்காடு அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

7. கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுகின்றன. தனியார் மருத்துவமனைகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வழக்கத்திற்கு மாறாக மிகுதியான அளவில் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இனிவரும் நாட்களில் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடிய ஆபத்து உருவாகி இருக்கிறது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆகும் தொகை முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்; அல்லது கொரோனா பேரிடர் காலம் முடியும் வரை இடைக்காலமாகத் தனியார் மருத்துவமனைகளைத் தமிழக அரசு கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

8. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகமெங்கும் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இது குறித்துப் பலமுறை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது வேதனையளிக்கிறது. அத்துடன், வன்கொடுமைகள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி தமிழக முதலமைச்சரின் தலைமையில் நடத்தப்பட்ட வேண்டிய கூட்டத்தை உடனே நடத்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்த வேண்டிய கூட்டத்தை நடத்தும் படி ஆணையிட வேண்டும் என்றும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

9. கொரோனா பேரிடர் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் மயமாக்கப் போவதாகவும் மூன்று அல்லது நான்கு நிறுவனங்களுக்குமேல் அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளப்போவதில்லையென்றும் அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் யாவும் மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

10. தனியார்மயமும், தாராளமயமும் அதிகரித்துள்ள நிலையில் எஸ்சி- எஸ்டி மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் வேலைவாய்ப்பைப் பெறுவது மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது. எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய சட்டங்களை இயற்றவேண்டுமென மத்திய மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

11. தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சம் சிறு- குறு நடுத்தர தொழிற்சாலைகள் பதிவு செய்துகொண்டுள்ளன. இதில் சுமார் 2 கோடி பேர் வேலை செய்கின்றனர். அவர்களில் கணிசமானவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவார்கள். சிறு- குறு நடுத்தர தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்காக ஆந்திர மாநில அரசு ஆணை பிறப்பித்திருப்பதுபோல் தமிழக அரசும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது .

12. மத்திய அரசு தற்போது மின்சார சட்டத் திருத்த மசோதா ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. இதுவரை மின் உற்பத்தியில் மட்டும் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ங்கள், இனி மின்விநியோகத்தில் ஈடுபடுவதற்கு இந்த சட்டத் திருத்த மசோதா வழிவகுக்கிறது. இதனால் இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள் மட்டுமல்ல; ‘ஒரு விளக்கு’- மின்இணைப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெற்றுக் கொண்டிருக்கின்ற லட்சக்கணக்கான ஏழைமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த மசோதாவைக் கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Response