தாராவி தமிழர்களின் நிலை குறித்து சீமான் அச்சம்

மராட்டியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சிக்குண்டிருக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

மராட்டியத்தில் கொரோனோ நோய்த்தொற்றுப் பாதிப்பு அபரிமிதமாகியுள்ள நிலையில் ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப்பகுதியாகத் திகழும் தாராவி மக்களின் வாழ்நிலை பெருங்கவலையைத் தருகிறது.

சமூகப்பரவல் வீரியமாகியுள்ள நிலையில் தாராவியில் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 859 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆகவும் இருப்பது அங்கு வாழும் அடித்தட்டு உழைக்கும் மக்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

சராசரியாக ஒரு கழிப்பிடத்தை 400 பேருக்கு மேல் பயன்படுத்துகிற நிலையிலுள்ள தாராவியில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மிகுந்த முன்னேற்பாடுகளும், அதிதீவிர நடவடிக்கைகளும் அவசியமாகிறது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்று நோய்த்தொற்று பரவலால் மராட்டியத்தில் சிக்குண்டு தாய்நிலம் திரும்ப முடியாது தவித்து வரும் தமிழர்களை உடனடியாகத் தமிழகத்திற்குத் திருப்பியனுப்ப வேண்டியது பேரவசியமாகிறது.

மராட்டியத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் மிகுதியாகவுள்ள நிலையில் அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதே அவர்களின் நல்வாழ்விற்கு உகந்ததாகும்.

எனவே, புலம்பெயர் தொழிலாளர்களாக மராட்டியத்திலுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும், தாராவியிலுள்ள அடித்தட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக மராட்டிய மாநில அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response