அறிவித்தால் மட்டும் போதுமா? – புலம்பும் ஈரோடு விசைத்தறித் தொழிலாளர்கள்

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிcசாமி நேற்று அறிவித்துள்ளார்.

இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து, பொதுமக்களில் பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் 1,770 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற 21,770 தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். இதற்காக ரூ.2.177 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா? என்பதை யாரும் கவனிப்பதில்லை.

அமைப்பு சாராத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு வந்தது.

இதனடிப்படையில் தகுதி பெற்ற ஈரோடு விசைத்தறி தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் அத்தொகைக்காக விண்ணப்பித்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டனவாம்.

ஆனால் இன்னும் அவர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரங்கம்பாளையத்திலுள்ள அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை என்று நொந்துகொள்கிறார்கள் விசைத்தறித் தொழிலாளர்கள்.

அறிவித்தால் மட்டும் போதாது. அது நடக்கிறதா? என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் விசைத்தறித் தொழிலாளர்கள்.

– செல்வன்

Leave a Response