ஐந்து மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு – தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு….

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று (24.4.2020) என்னால் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளபோதிலும், நகர்ப்புறங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்த நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இதுகுறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதில், நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, இந்த நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

1. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29.4.2020 புதன் இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும்.

2. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 28.4.2020 செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Response