
இந்தியாவில், இராணுவம், தொலைத்தொடர்பு, மருந்து, காப்பீடு, ஊடகம் உள்ளிட்ட துறைகளில், அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை.
அதேசமயம், தகவல் தொழில் நுட்பம், கட்டுமானம், தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில், அந்நிய நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்து, பின், ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தால் போதும். தொழில் தொடங்குவதைச் சுலபமாக்க, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தாக்கத்தால், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அந்நிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களைச் சுலபமாகக் கையகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
கடந்த வாரம், சீனாவின் மத்திய வங்கி, இந்தியாவின் வீட்டு வசதிக் கடன் துறையைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., நிறுவனத்தின், 1.75 கோடி பங்குகளை, 3,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இதையடுத்து,காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, அந்நிய முதலீட்டு விதிகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று ஏப்ரல் 12 ஆம் தேதி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசு அதற்கான விதிகளை மாற்றியுள்ளது.
இதுகுறித்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்கள் மேம்பாட்டுத் துறை ஏப்ரல் 18 அன்று வெளியிட்ட குறிப்பில்,
இந்தியாவின் எல்லையோர நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டுக் குடிமகனாக இருந்தாலோ அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டில் இருப்பவராக இருந்தாலோ, அரசிடம் முதலில் முறையிட வேண்டும்
என்று கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு, ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து, ராகுல் காந்தி கூறும் போது, “எனது எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு அந்நிய நேரடி முதலீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


