கொரோனா பாதிப்பில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் – மக்கள் அச்சம்

தமிழகத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஓமனிலிருந்து திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது முதலில் கண்டறியப்பட்டது.

அடுத்தபடியாக டெல்லியிலிருந்து சென்னை வந்த இளைஞருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் ஒன்றிரண்டாக எண்ணிக்கை கூடி வந்த நிலையில் 50 என்கிற எண்ணிக்கையை கடந்த வாரம் தொட்டது. இந்நிலையில் திடீரென 17 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு 67 ஆனது. தாய்லாந்திலிருந்து வந்தவர்கள் மூலமும் அவர்களுடன் கலந்துகொண்டவர்களுக்கும் இந்த பாதிப்பு இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதும், அவர்களில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் சென்று வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவ்வாறு வந்தவர்களைக் கண்டறியும் பணி நடந்தது. கண்டறியப்பட்ட 523 பேர் தவிர மற்றவர்களைக் கண்டறியும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டது.

அன்று ஒரே நாளில் அந்தக் குழுவில் இருந்த 50 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியானது. காலையில் 7 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. ஆக மொத்தம் 57 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக அதிகரித்தது.

இதையடுத்து, இந்திய அளவில் 8 ஆவது இடத்தில் இருந்த தமிழகம் சட்டென 3 ஆவது இடத்துக்கு உயர்ந்தது. சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், டெல்லி சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களைப் பற்றிய தகவலை அளிக்கச் சொன்னதன் பேரில் 1,103 பேர் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர். அதில் நேற்று மட்டும் 110 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டு எண்ணிக்கை 234 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று மேலும் 75 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 309 ஆக அதிகரித்தது. அதனால் இரண்டாம் இடத்தில் இருந்த கேரளாவை கீழே தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது தமிழகம்.

மேலும், பலருக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் சுகாதாரத்துறை அமைச்சர் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து 411 ஆக தமிழக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் 423 பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 411 பேருடன் 2-ம் இடத்திலும், 286 பேருக்கு பாதிப்பு உள்ள நிலையில் கேரளா மூன்றாவது இடத்திலும், 219 பேருடன் டெல்லி நான்காவது இடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்ட 484 பேரின் மாதிரிகள் ஆய்வில் உள்ளன என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

”தமிழகத்தில் இதுவரை சோதிக்கப்பட்டவர்கள் 2 இலட்சத்து 10 ஆயிரத்து 538 பேர்.

உள் சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் 23 ஆயிரத்து 689 பேர். வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளவர்கள் 3,396 பேர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1,580 பேர். ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டது 3,684. கரோனா இல்லை என அறியப்பட்டது 2,789 பேர். கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது 411 பேர்.

உடல் நலம் தேறியவர்கள் (Discharged) 7 பேர், ஆய்வுக்காக அனுப்பப்பட்ட மாதிரிகள் முடிவுக்காக காத்திருப்பது 484 பேர்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

484 பேர் முடிவுக்காகக் காத்திருப்பதால் இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தமிழக மக்கள் கூடுதல் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Response