கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்திலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று புதிதாக 8 பேருக்குக் கண்டறியப்பட்டதால் அந்த எண்ணிக்கை 50 ஆகியுள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய 2 பேர், கொரோனா தொற்றுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சென்னை போரூரைச் சேர்ந்த அவர்கள் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நோய்த் தொற்று இல்லை என முடிவுகள் வெளிவந்து உள்ளன. அவர்களுக்குக் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் இரண்டு பேரும் அடுத்த 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். இருவரையும் மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு நன்கு கவனித்துக் கொண்ட மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவக் குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டு உள்ளார்.
இதுவரை சிகிச்சைக்குப் பின் 4 பேர் குணமடைந்து உள்ளனர்.தொடர்ந்து பீதி கிளப்பும் செய்திகளே வந்துகொண்டிருக்கும் நேரத்தில் இது ஆறுதலான செய்தியாக இருக்கிறது.