அமித்ஷா எங்கே ? – வெடிக்கும் வடமாநிலங்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மார்ச் 24 நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினக்கூலிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் பல இலட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் இல்லாததால் வேறுமாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லி, அரியானா, நொய்டா, காசியாபாத் ஆகிய பகுதிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இலட்சக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர். அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்துள்ளனர். வருமானம் இல்லாததால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பலர் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மனைவி குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கால்நடையாகவே நடந்து டெல்லியை விட்டு வெளியேறினர்.

எல்லையைத் தாண்டிய மக்கள், காசியாபாத்தில் உள்ள லால் குவான் வரை நடந்து வருவதாகக் கூறினர். அவர்களில் சிலர் முகமூடி அணிந்திருந்தனர், மேலும் பலர் கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பாக முகத்தில் கைக்குட்டைகளை கட்டியிருந்தனர்.

புறநகர்ப் பகுதியான காசியாபாத்துக்கு வந்து அங்கிருந்து தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்திப் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

மும்பை, ஹைதராபாத் மற்றும் ஏழைகள் தங்கள் சொந்த இடத்திற்கு திரும்பிச் செல்லும் பிற பெரிய நகரங்களிலும் இதேபோன்ற காட்சிகள் காணப்படுகின்றன, இது போன்ற பெரிய குழுக்களுக்கு சமூக விலகல் பற்றிய கருத்து இல்லாததால் கொடிய கொரோனா வைரஸின் சமூகம் தொற்றாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் நெடுஞ்சாலை அருகே வெளி ரிங் சாலையில் லாரி மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த வேன் தெலுங்கானாவின் சூர்யாபேட்டையில் இருந்து கர்நாடகாவின் ரைச்சூர் வரை 30 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குழுவை ஏற்றிச் சென்றது. ஊரடங்கால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் நடந்த மற்றொரு விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் டெம்போ மோதியதில் பலத்த காயமடைந்தனர். இந்த குழுவும் மராட்டியத்தில் இருந்து குஜராத் வழியாக தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் குஜராத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை, எனவே அவர்கள் மராட்டியத்துற்கு திரும்பினர் அப்போது விபத்து ஏற்பட்டது.

வடமாநிலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து போய்க் கொண்டிருப்பதை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கோபமான மக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் காணவில்லை என்கிற குறிச்சொல்லுடன் சமூகவலைதளங்களில் ஏராளமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சிறுகுழந்தைகளும் இடுப்பிலும் தலையிலும் சுமைகளுடன் நடந்து செல்லும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

Leave a Response