கொரோனா பீதி – கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமல்

சவுதிஅரேபியாவுக்குச் சென்று வந்த கர்நாடக மாநிலம் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா அறிகுறியுடன் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் மார்ச் 11 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கையில், அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை கர்நாடக சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தி உள்ளது. கலபுரகி முதியவர் தான், கொரோனா வைரசால் இந்தியாவில் பலியான முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மழலையர் பள்ளிகள், 5-ம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் 6-ம் வகுப்பு வரை பள்ளி பொதுத்தேர்வுகளையும் இரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இதில் துணை முதல்வர்கள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, மருத்துவக் கல்வி அமைச்சர் சுதாகர், பள்ளிக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார், தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே பெங்களூரு இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி எழுதிய கடிதத்தில், கர்நாடகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், கூட்ட அரங்குகளை மூடுமாறு கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப் பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது…..

கர்நாடகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தியேட்டர்கள், வணிக வளாகங்கள், இரவுநேர விடுதிகள், கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். கோடைக்கால சிறப்பு முகாம்கள், கூட்டங்கள், கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், நிச்சயதார்த்தம், பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சி நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி-கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படுகிறது. அரசு நடத்தும் விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அரசு அலுவலகங்கள், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான தேர்வுகள், சட்டசபை கூட்டம் போன்றவை திட்டமிட்டப்படி நடைபெறும். இதற்கு தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தனியார் மருத்துவமனைகள், கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள நோயாளிகள் குறித்து உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தங்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் யாரேனும் சிகிச்சை பெற வந்திருந்தால் அவர்களைப் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஐ.எம்.ஏ. நிர்வாகி டாக்டர் தேவிஷெட்டி, கர்நாடக தனியார் மருத்துவமனைகள் சங்கத் தலைவர் டாக்டர் ரவீந்திரா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த வைரசை கட்டுப்படுத்தத் தேவையான உதவிகளை வழங்குவதாக சுதா மூர்த்தி உறுதியளித்து உள்ளார்.

யாரையும் தொடக்கூடாது. 6 அடி தூரத்தில் இருந்தபடி பேச வேண்டும். கொரோனா வைரஸ் ஆய்வகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். தனியார் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.

Leave a Response