தேமுதிகவுக்கு இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி தகவல்

இந்திய நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அடுக்குகளாகச் செயல்படுகிறது. மக்களவையின் 545 உறுப்பினர்களில் 543 பேர் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 18 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா (பா.ஜனதாவில் இணைந்துள்ளார்), தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதியுடன் முடிவடைகிறது.

காலியாகும் இந்தப் பதவிகளில் புதிய உறுப்பினர்களை ஏப்ரல் மாதமே நியமித்தாக வேண்டும். இதனை முன்னிட்டு, 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 25 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்கான தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.

இதனால் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குப் பதவியைப் பெற முயல்கின்றன. அதிமுக கூட்டணியில் கடந்தமுறை பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு பதவி அளிக்கப்பட்டது. திமுகவில் வைகோவுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது நடக்கும் தேர்தலில் விஜயகாந்த் கட்சி ஒரு இடம் கேட்கிறது.இதுகுறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைப்பிடிக்கின்ற கட்சி. முதலமைச்சரும் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை தேமுதிகவுக்குத் தருவார் என எதிர்பார்க்கிறோம். கூட்டணி முடிவானபோதே, மாநிலங்களவை எம்.பி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது…

கேள்வி:- வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான 3 வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பது பற்றி?

பதில்:- அதை அ.தி.மு.க. தலைமைக்கழகம் கூடி, தலைமைக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்குத்தான் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இனிதான் முடிவு செய்வோம்.

கேள்வி:- பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தர்மத்தை மதித்து தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறாரே?.

பதில்:- கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அதை அ.தி.மு.க. தலைமைக்கழகம் தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க. வில் பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும். எல்லாமே தலைமைக்கழக நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

அதிமுகவில் பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் அதையும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம் தேமுதிக வுக்கு இடமில்லை என்பதை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response