ரஜினி பேட்டியால் அம்பலத்துக்கு வந்த மோடி அமித்ஷா மோதல்

இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகச் சொல்லப்பட்டது. அது கடந்தகாலம். இப்போது இருவருக்கும் இடையே மோதல் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.

தில்லியில் தற்போது நடக்கும் கலவரம் இவர்களுடைய மோதலை அம்பலப்படுத்தும் வண்ணம் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.

தில்லி கலவரத்துக்கு அடிப்படைக் காரணம் தில்லி பாஜக தலைவர் கபில்மிஸ்ரா என்று சொல்லப்படுகிறது. அவர் அமித்ஷாவின் ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபர் வருகையின்போது மோடியின் செல்வாக்கு உலக அளவில் உயரும் எனும் நிலையில்தான் பெரும் வன்முறை வெடித்தது. அது டிரம்ப் வரை போய் அதுகுறித்து அவர் மென்மையாகப் பேசிவிட்டுப் போனார்.

ஆனாலும் அவர் டெல்லியில் இருந்த நாளிலேயே இவ்வளவு பெரும் கலவரம் ஏராளமான உயிரிழப்புகள் என்பது இந்திய அரசுக்குக் கரும்புள்ளி.அது நேரடியாக மோடியின் மதிப்பைக் குறைக்கும் என்கிற கணக்கில் நடந்ததாகவே சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று ரஜினிகாந்த் பேட்டியின்போது,டெல்லி கலவரம் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என்றும் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும் என்று சாடியிருந்தார்.

அதோடு அவர் சொன்ன இன்னொரு கருத்து, தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு தெளிவாகச் சொல்லிவிட்டது. அதைப்பற்றி மறுபடியும் குழம்பிக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? என்று கேட்டிருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பாக, தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பொதுமேடைகளில் பிரதமரின் கருத்தும், அமித் ஷாவின் கருத்தும் முற்றிலும் எதிர் திசைக்குச் சென்றதை பாஜகவினர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும். அதைப் பின் தொடர்ந்து நாடு முழுதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். ஊடுருவல்காரன் ஒருத்தனும் இங்கே இருக்க முடியாது, தூக்கி வெளியே போட்டுவிடுவோம்’ என்று நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல ஜார்க்கண்ட் மேடைகளில்கூட அமித் ஷா தனக்கே உரிய உறுதியான மொழியில் பேசினார். பாஜக செயல் தலைவர் நட்டாவும் இதையேதான் பேசினார்.

ஆனால், டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘என்ஆர்சி என்பது எங்கள் திட்டத்திலேயே இல்லை’ என்று அறிவிக்க, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவில் பலருக்கே அதிர்ச்சி. 2019 தேர்தல் அறிக்கையிலேயே இதுபற்றி நாம் சொல்லியிருக்கிறோம். ஆனால், பிரதமர் மாற்றிச் சொல்கிறாரே என்று கட்சிக்குள்ளேயே விவாதம் ஏற்பட்டது.

இதன்மூலம் மோடி அமித்ஷா மோதல் வெளிப்படையாகத் தெரிகிறது என்று டெல்லியில் பேசப்பட்டது.

இப்போது அதை பிரதிபலிக்கும் வகையிலேயே ரஜினிகாந்தும் பேசியிருக்கிறார் என்கிறார்கள். அவர் அமித்ஷாவை விமர்சிக்கிறார். ஆனால் மோடி ஆதரிக்கும் சிஏஏ அமலாகிவிட்டது அதைத் தடுக்க முடியாது என்கிறார்.

அமித்ஷா மோடி ஆகியோரில் ரஜினிகாந்த் மோடியின் ஆதரவாளர் என்றும் அவருடைய கருத்துகளையே ரஜினி பிரதிபலிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response