70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள டெல்லி சட்டமன்றத்துக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியைத் தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியைப் பிடிப்பதற்காக காங்கிரசும் பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மிக்காக முதல்வர் கெஜ்ரிவாலும், பாரதீய ஜனதாவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தீவிர பரப்புரை மேற்கொண்டனர். காங்கிரசுக்காக அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தார்.
இந்தத் தேர்தலில் 1 கோடியே 46 இலட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்களுக்காக 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான மின்னணு வாக்கு எந்திரங்களும், பிற உபகரணங்களும் நேற்று மாலை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.
மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகளில் 2,689 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும், அதில் 545 வாக்குச்சாவடிகள் மிக மிக பதற்றமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனால் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்புப் பணியில் டெல்லி காவல்துறையினர் 40 ஆயிரம் பேரும், மத்திய ஆயுதப்படையினர் 20 ஆயிரம் பேரும், ஊர்க்காவல் படையினர் 19 ஆயிரம் பேரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இன்றைய தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.