இந்திய இலங்கை கிரிக்கெட் சுமுகமாக நடக்குமா? – பதட்டத்தில் அசாம்

இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி இலங்கை வீரர்கள் நேற்று முன் தினம் கவுகாத்தி சென்றடைந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் பல குழுவாக நேற்று கவுகாத்தி சென்று சேருகிறார்கள்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் நடந்ததால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக ரஞ்சி கிரிக்கெட், ஐ.எஸ்.எல் கால்பந்து, 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தப்போட்டி நடக்கவிருப்பதால், போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறதெனச் சொல்லி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இருந்தாலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் காண்பிக்கப்பட்டுவிடுமோ என்கிற பதட்டத்தில் அமைப்பாளர்கள் இருக்கின்றனர். அதன் எதிரொலியாக ரசிகர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

கவுகாத்தியில் நாளை நடக்கும் முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 12 ஆண்டு கால சாதனையைத் தக்கவைக்கும் முயற்சியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

2 ஆவது 20 ஓவர் போட்டி 7 ஆம் தேதி இந்தூரிலும், கடைசி ஆட்டம் 10 ஆம் தேதி புனேயிலும் நடக்கவிருக்கிறது.

Leave a Response