1500 வருடங்களுக்குப் பிறகு ஈரானில் பறக்கும் செங்கொடி – உக்கிரமான போர் வருமா?

சனவரி 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதி சுலைமானின் இறுதி ஊர்வலம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சனிக்கிழமை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட காரில் சுலைமான் உடல் கொண்டு செல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஈரானில் ஷியா மதத் தலைநகரமாக கருதப்படும் கோம் நகரில் உள்ள புனித ஸ்தலமான Jamkaran மசூதியின் உச்சியில் செங்கொடி ஏற்றப்பட்டது. இது நவீன உலக வரலாற்றில் முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. இதில் உள்ள விசேஷம் என்ன?

இஸ்லாமிய ஷியா மதப் பிரிவினரை பொறுத்தவரையில் இந்த செங்கொடி ஒரு வரலாற்றுத் துயரத்தைக் குறிப்பால் உணர்த்துகிறது. இஸ்லாமிய மதம் பரவிய ஆரம்ப காலங்களில் இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர் யார் தலைமை தாங்குவது என்ற பிரச்சினை எழுந்தது. இறைதூதர் முகமதுவின் உறவினரான அவரது மகள் பாத்திமாவை மணம் முடித்த அலியின் தலைமையை ஏற்றவர்களும், அதற்கு எதிரானவர்களும் இஸ்லாமிய அகிலத்தின் தலைமைப் பதவிக்கு மோதிக் கொண்டனர்.

சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர், இன்றைய ஈராக்கில் நடந்த யுத்தத்தில், அலியும் அவரது மகன்மார் ஹசனும், ஹுசைனும் கொல்லப் பட்டனர். இருப்பினும், கர்பலா நகரில் நடந்த இந்தப் படுகொலைக்கு வஞ்சம் தீர்க்கும் நோக்குடன் தொடுக்கப் பட்ட போர் அடுத்து வந்த நான்கு வருடங்களுக்கு தொடர்ந்து நடந்தது. அதுவே பெரும் இரத்தக்களறியை உண்டாக்கிய, மிக உக்கிரமாக நடந்த போர் எனலாம்.

அன்று அலி மற்றும் அவரது மகன்மார் ஹசன், ஹுசைனின் மரணத்திற்காகப் பழி தீர்க்கப் போரிட்ட இஸ்லாமிய மதப் பிரிவினர், மற்றும் அவர்களது வம்சாவளியினர் தான் ஷியாக்கள். அவர்கள் அன்று நடந்த போரில் பழிக்குப் பழி வாங்கியதுடன் நில்லாது, ஈரானில் ஒரு சுதந்திர அரசமைத்து தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். இந்த வரலாறு காரணமாகத் தான் ஈரான் இன்னமும் ஷியாக்களின் தாயகமாக கருதப் படுகிறது.

வரலாற்றில் முதல் தடவையாக கர்பலாவில் அலி கொல்லப்பட்ட பின்னர் அன்று ஷியா படைக்குத் தலைமை தாங்கிய அவரது மகன் ஹுசைனால் செங்கொடி ஏற்றப்பட்டது. போரில் மரணித்த தியாகிகளின் குருதியால் நனைந்த படியால் அது செங்கொடி ஆனது. அதற்குப் பின்னரான உணர்ச்சிக் கொந்தளிப்பில் தான் அன்று கடுமையான போர் நடைபெற்றது.

அந்தச் சம்பவம் நடந்து ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னர், இப்போது தான் அது போன்ற செங்கொடி மீண்டும் ஏற்றப் பட்டுள்ளது. அது உண்மையானால், இந்தச் சம்பவமானது இனி வருங்காலத்தில் உக்கிரமான போர் நடக்கப் போவதற்கான அறிகுறி.

– கலைமார்க்ஸ்

Leave a Response