திமுக கூட்டணியில் கமல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக எந்த வகையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்பது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

மதவாதக் கண்ணோட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு எதிராக அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை நடத்தி வருகின்றன. டெல்லி ஜாமியா, உத்தரப்பிரதேசம் அலிகார் பல்கலைக்கழகங்களில் போராடிய மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறைக்கும், ஏவிவிட்ட மத்திய அரசுக்கும் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தக் கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பா.ஜனதா அரசுக்கும், அதற்கு துணை நின்று, ஈழத்தமிழர்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் துரோகம் இழைத்த மாநில அ.தி.மு.க. அரசுக்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னையில் “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” நடத்துவது என இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, “எங்களுடைய கோரிக்கைகள் 2 தான். அண்டை நாடுகள் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்? அகதிகளாக வரும் பிற மதத்தினர் போல், இஸ்லாமியர்களைத் தவிர்த்திருப்பது ஏன்? இந்த 2 கோரிக்கைகளை அடிப்படையாக வைத்துத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், அ.தி.மு.க., பா.ம.க.வினர் தமிழினத் துரோகிகளாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள். நிச்சயமாக அவர்களைத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?

பதில்:- எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை மோடியோ, அமித்ஷாவோ, மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை அப்படியே அடிபணிந்து காலில் விழுந்து ஏற்றுக்கொள்ளக்கூடியவர். எனவே அவர் சொல்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கேள்வி:- குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் தி.மு.க.வை விமர்சித்துள்ளதுடன், தி.மு.க.வைக் கண்டித்து 20-ந் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாரே?

பதில்:- அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் ஏற்கனவே 5 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி நடந்துள்ளது. இப்போதும் அவர்கள் ஆட்சி தான் தொடர்கிறது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை மக்களிடத்தில் சொன்னால், பயனுள்ளதாக இருக்கும்.

கேள்வி:- தி.மு.க. கூட்டணிக் கட்சிக் கூட்டத்தை சாத்தான் வேதம் ஓதுவதை போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

பதில்:- அவருக்கு எல்லாம் நாங்கள் வேதம் ஓதவேண்டும் என்ற அவசியம் இல்லை.

கேள்வி:- 13 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரவில்லையே என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?

பதில்:- அதைப் பற்றி பேசி விதண்டாவாதம் செய்ய நான் தயாராக இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முடிவு வரவேண்டும். அதற்காகத்தான் இந்தக் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுத்துள்ளோம்.

கேள்வி:- தங்களுக்கு அழைப்பு விடுத்தால் வருவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தாரே?

பதில்:- அவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவரிடம் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் 11 கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளோம் என்று கூறி உள்ளேன். தேவைப்பட்டால் அனைத்து அமைப்புகளையும், கூட்டணிக்கு அப்பாற்பட்டு இருக்கும் அனைவரையும் அழைத்து இதுபோன்ற கூட்டம் நடத்தும் போது நிச்சயமாக அவர் அழைக்கப்படுவார்.

கேள்வி:- பேரணியில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுப்பீர்களா?

பதில்:- சென்னையில் நடைபெறும் இந்த பேரணியில் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் நேற்று பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனிடம், தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் நடத்தும் பேரணியில் நீங்கள் பங்கேற்பீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர், ‘காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் என்னால் பங்கேற்க முடியாது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாகப் பங்கேற்கும்’ என்றார்.

இதன்மூலம் திமுக கூட்டணியில் இருக்கும் 11 கட்சிகளோடு பனிரெண்டாவதாக இந்தப்போராட்டத்தில் கமல் இணைகிறார். இது தொடருமா? என்பது போகப்போகத் தெரியும்.

Leave a Response