பா.இரஞ்சித் தயாரித்த குண்டு பட அரசியல் – வன்னிஅரசு ஆதங்கம்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் புது இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு.

இந்தப்படம் நேற்று (டிசம்பர் 6) வெளியானது.

இந்நிலையில் இப்படம் பற்றி விடுதலைச்சிறுத்தைகள் வன்னியரசு எழுதியுள்ள பதிவு…..

‘குண்டு’வுக்கு
பின்னுள்ள அரசியல்!
………………………………………….
போர் வந்தா என்னாகும்?
எத்தனை கோடி மக்கள் சாவாங்க? அங்கே வீசப்படும் குண்டுகளால் இந்த பூமி என்ன மாதிரியான அழிமாந்திரத்தை எதிர்கொள்ளும்? ஆகவே போரில்லா உலகம் வேண்டும் என்னும் உயரிய கருத்தை திரைக்கதையாக்கி ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’என்று தந்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.

முதல் படமே பிரமிக்க வைத்திருக்கிறார். நம்பிக்கைக்குரிய இயக்குனராக உயர்ந்து நிற்கிறார்.
இயக்குனருக்குள் இருக்கும் மனித நேயமும் பொதுவுடைமை பார்வையும் வாழ்வியல் சூழலும் என்ன மாதிரியான அரசியல் சூழலில் களமாடுகிறார் என்பதை காட்டுகிறது.

ஒரு சாதாரண லாரி ஓட்டுனரின்
வாழ்க்கையை விடாது துரத்தும் அந்த அணுகுண்டு நம்மையும் துரத்திக்கொண்டே இருக்கிறது.
அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது.
அந்த குண்டுகளுக்கு
பின்னுள்ள பலமிக்க
‘ஆயுத பேர அரசியலை’ கார்பரேட் நிறுவனங்களை துணிச்சலாக அம்பலப்படுத்தி உள்ளார் இயக்குனர் அதியன் ஆதிரை.

அந்த ஆயுத தரகு முதலாளிகளுக்கு இன்னொரு தரகு வேலை பார்க்கும் அதிகாரவர்க்கமான காவல்துறையையும் அம்பலப்படுத்தி இருக்கிறார். குண்டு வெடித்தால் எத்தனை கோடி பேர் செத்தாலும் பரவாயில்லை பணம் தான் இந்த அதிகார வர்க்கத்துக்கு தரகு வர்க்கத்துக்கு வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை உயிரோட்டமான திரைக்கதையினால் எச்சரித்துள்ளார்.

எப்போதுமே ஆளும் அதிகார வர்க்கத்திடமிருந்து இந்த உலகை காக்கும் வர்க்கம்,
உழைக்கும் வர்க்கம் தான்,
ஏழை எளியவர்கள் தான் என்பதை
லாரி வெளிச்சம் போல காட்டி இருக்கிறார் இயக்குனர்.

அதனூடான காதலும் போராட்டங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. காதலுக்கான பிரச்சனை பொருளாதார பிரச்சனை போல காட்டப்பட்டுள்ளது. அதை தெளிவு படுத்தி இருக்கலாம்.

படத்தில் மிக முக்கியமாக பாராட்ட வேண்டியது பாடல்கள். இசை நம்பிக்கை ஊட்டக்கூடியதாக அமைத்திருக்கிறார் இசை அமைப்பாளர்.

அதுவும் அந்த தெருக்கூத்து பாடல் பல கதைகளை சொல்லுகிறது.
இயக்குனரையும் படக்குழுவினரையும் வாழ்த்துவோம்
பாராட்டுவோம்.

ஆனாலும் ஒரே ஒரு நெருடல்?

மாமல்லபுரத்தில் ஆயுத தளவாடங்கள் வைப்பதை எதிர்த்து தன்யா என்னும் டாகுமென்டரி இயக்குனர் தலைமையில் போராட்டம் நடக்கிறது.
“ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
ஜெய்பீம் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு வருகின்றனர். ( இன்குலாப் ஜிந்தாபாத் என்று தான் முழங்கி இருக்கிறோம்)
அப்போது கம்யூனிஸ்டு கொடிகள், SFI கொடிகளோடு அம்பேத்கர் படம் பொறித்த கொடிகளும் காட்டப்படுகின்றன.
(ஐடியா தயாரிப்பாளரா? வசனகர்த்தாவா?)

கதைக்களம் தமிழ்நாடு தான்.
அப்படியானால் தமிழ்நாட்டில் இடதுசாரிகளோடு இணைந்து
பொது நீரோட்டத்தில் போராடும் அம்பேத்கர் கொள்கையுடைய கட்சி எது? தமிழ்நாட்டில் அம்பேத்கர் படம் பொறித்த நீலக்கொடிகளுடைய கட்சிகள் எவை? தமிழ்நாட்டு பொதுப்பிரச்சனையில் அந்த இயக்கங்களின் பங்களிப்பு என்ன?
அம்பேத்கர் பிறந்த நாள், இறந்த நாளில் மட்டும் தங்களது இருப்பை காட்டிக்கொள்ளும் இம்மாதிரியான இயக்கங்கள் ஆயுத தளவாடம், அணுஎதிர்ப்பில் கொடி பிடித்து போராட்டம் நடத்துவது போன்று
காட்டுவது என்ன மாதிரியான அரசியல்?
அப்படி இதற்கு முன் போராடி இருக்கின்றனவா?
(‘ஜெய்பீம்’ என்ற வார்த்தை தவிர மற்ற எவையும் தமிழ்நாட்டில் தமக்கு சம்மந்தமில்லாதவை என்று இருப்பவை)

தமிழ்நாட்டில் முல்லைப்பெரியாறு பிரச்சனையா? காவிரி நீர் உரிமை பிரச்சனையா? இடிந்த கரையில் அமைக்கப்பட்ட அணு உலைகளுக்கு எதிரான பிரச்சனையா? மீத்தேன் எதிர்ப்பு போராட்டமா? நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டமா? ‘நீட்’ எதிர்ப்பு போராட்டமா? தமிழீழ ஆதரவு போராட்டமா? ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டமா? ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டங்களா? இந்துத்துவ எதிர்ப்பு போராட்டங்களா?
அத்தனை போராட்டங்களையும் பொது நீரோட்டத்தில் நின்று முன்னெடுக்கும்
அம்பேத்கர் வழி இயக்கம் எது என்பதை
பொதுவிலேயே விட்டு விடுகிறேன்.

மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லட்டும்.

தலித்துகளை பொது நீரோட்டத்தில் கொண்டு வர கால் நூற்றாண்டுக்கும் மேலாக களமாடி வரும் அந்த பேரியக்கத்தை ஒரு சினிமா மறைக்க முடியுமா தோழர்களே?

– வன்னி அரசு
7.12.2019

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

தமிழக அரசியல், தமிழின நலன் மற்றும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை ஆகியன உட்பட எல்லாவகைப் போராட்டங்களிலும் பங்காற்றி பல நற்பலன்களைப் பெற்றுத்தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உழைப்பை இப்படம் மறைக்கிறது என்பதே வன்னியரசுவின் ஆதங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response