நிதின்கட்கரி வீட்டில் இரு சக்கர வாகனத்தைத் தூக்கி வீசிப் போராட்டம்

மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர் ஆகியோருக்கான அபராத தொகை ரூ.100 இல் இருந்து 1,000 மாக உயர்ந்துள்ளது. அதேபோல மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 இல் இருந்து 10 ஆயிரமாக வசூலிக்கப்படுகிறது.

இந்தச் சட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராத உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.

மேலும் சில மாநில அரசுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளன.மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவலர்கள் வைத்துள்ள தடுப்பின் மீது இரு சக்கர வாகனத்தை தூக்கி வீசி காங்கிரசுக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Response