என்றும் விலகாது அந்தச் சிலிர்ப்பு – கலைஞர் முதலாண்டு நினைவில்..

கலைஞர் மு.கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்தவர். 1969 இல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 இல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர்.

தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே அழைக்கப்படுகின்றார்.

இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். சூன் 3, 1924 இல் பிறந்த அவர், ஆகத்து 7, 2018 ஆகத்து 7 ஆம் நாள் தம்முடைய 94 ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.

வாழ்நாள் போராளியான அவருடைய முதலாண்டு நினைவு நாளை ஒட்டி, வரலாற்று ஆய்வாளரும் தூய தமிழ்ப் பரப்புநருமான செந்தலை கவுதமன் எழுதியுள்ள பதிவு…..

கலைஞர் தந்த முதல் நினைவு !
~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருக்காட்டுப்பள்ளி பேருந்துநிலையம் திறந்து வைக்க 1967இல் வந்தார் கலைஞர் !

அண்ணா அமைச்சரவையில் அவர் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர். அன்றைக்குத்தான் கலைஞர் பேச்சை முதன்முறையாய்க் கேட்கிறேன்.

நாங்கள் திராவிடர் கழகக் குடும்பம் என்பதால்,தி.மு.கழகக்
கூட்டங்களுக்குச் செல்லும் வழக்கம் அதுவரை இல்லை.

முதலமைச்சரான பின் அண்ணா திருச்சி சென்று பெரியாரைச் சந்தித்து ஆதரவு கேட்டதால், இரண்டு இயக்கங்களும்
நட்பு பாராட்டத் தொடங்கிய நேரம்! கலைஞர் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் கூடியது.

செந்தலை திராவிடர் கழக மூத்த தோழரும் அரசியல் சட்ட எரிப்பு வீரரும் முடிதிருத்தகம் வைத்திருந்தவருமான கோவிந்தராசன் அவர்களும், கலைஞர் பேச்சு கேட்கும் ஆவலோடு உடன்
வந்தார்.

காலை நிகழ்ச்சி என்பதால் எங்கள் ஊர் செந்தலையிலிருந்து
மற்றவர்கள் வர மறுத்துவிட்டனர்.

சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளி மாணவன் நான்! பள்ளிக்கு அன்று விடுமுறை. கலைஞர் கூட்டம் கேட்பதற்காக இந்த ஓட்டம்.

உள்ளூர்க் கோவில் இறைவன் பெயர்’அக்கினீசுவரர் ‘! அந்தப் பெயரைப் பேருந்து நிலையத்திற்கு வைக்க முன்பே முடிவெடுத்திருந்தனர்.

திறந்துவைக்க வருபவர் கலைஞர் என்பதால், சாமி பெயரைத் தூய
தமிழில் மாற்றி ‘ தீயாடியப்பர் பேருந்து நிலையம் ‘ என நுழைவு
வளைவை அமைத்திருந்தனர்.

திறந்து வைத்துக் கலைஞர் பேசினார் :” செந்தமிழைக் காக்கத் தீக்குளித்த சின்னச்சாமி முதலிய மொழிப்போர் ஈகியரை நினைவூட்டும் பெயர் ‘தீயாடியப்பர்’ !”

இப்படிப் புதுவிளக்கம் தந்து பேசிய கலைஞர், மொழிகாக்கும் உணர்வைச் சேர்த்து ஊட்டிச் சிலிர்க்க வைத்தார்.
என்றும் விலகாது அந்தச் சிலிர்ப்பு !

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response