என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? – உச்சகட்ட பதற்றத்தில் காஷ்மீர்

காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் இராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள், தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டது.வெளிமாநிலத்தவர்களும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டம், கூட்டமாக ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.

வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஜம்மு, உதம்பூர், கத்ரா ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான பயணிகள் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருப்பதால், டிக்கெட் பரிசோதனையில் எந்த கெடுபிடியும் காட்ட வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் இல்லாமல் கூட காஷ்மீரிலிருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரீகர்கள், வெளிமாநில மாணவர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய இர்பான் பதான் உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த 100 வீரர்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டுமென ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இவர்கள் கிரிக்கெட் போட்டிக்காக காஷ்மீர் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் அமர்நாத் புனித பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் ஸ்ரீநகரில் இருந்து வெளியேறத் தொடங்கியதால் தனியார் விமான நிறுவனங்கள் கட்டணத்தை இஷ்டத்துக்கு அதிகரித்து விட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இதையடுத்து பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா ஸ்ரீநகர்-டெல்லி விமானங்களுக்கு ரூ.6,715-ம், டெல்லி-ஸ்ரீநகர் விமானங்களுக்கு ரூ.6,899-ம் கட்டணமாக நிர்ணயித்தது.

இந்த கட்டணம் 15-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கல்லூரிகள், தங்கள் விடுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளை வெளியேற்றி சொந்த ஊர் திரும்புமாறு கூறி விட்டன. இஸ்லாமிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.

விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேறி, ஊர் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் விடுதிகளை விட்டு வெளியேறி சொந்த ஊர்களுக்கு திரும்பியவண்ணம் உள்ளனர்.

ஸ்ரீநகரில் தால் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகம், போலீஸ் தலைமை அலுவலகம், விமான நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து உள்ளனர்.

இதற்கிடையே காஷ்மீரை 3 ஆக பிரித்து, ஜம்மு மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை ரத்து செய்ய முடிவு எடுத்து உள்ளதாகவும், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையின்போது வெளியிடக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தின.

ஆனால் அப்படி எந்தத் தகவலும் இல்லை என காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் மறுத்துள்ளார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீரில் நிலவி வருகிற அசாதாரணமான சூழ்நிலைக்கு மத்தியில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றைக் கூட்டி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், உளவுத்துறை (ஐ.பி.) தலைவர் அரவிந்த் குமார், வெளிநாட்டு உளவு பிரிவு (ரா) தலைவர் சமந்த் குமார் கோயல் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய சூழல், மக்கள் மனநிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள், படையினர் கண்காணிப்பு, ரோந்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமித்ஷாவிடம் அதிகாரிகள் விளக்கினர்.

அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என உளவுத்தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தில் கேரன் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே மர்மமான முறையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

நேற்று மாலை காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா வீட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இதில் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் காலை 9.30 மணிக்கு மத்திய மந்திரிசபையை கூட்டி ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றால், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்று தெரியாமல் காஷ்மீர் மக்கள் உச்சகட்டப் பதற்றத்தில் இருக்கிறார்கள். காஷ்மீர் பதற்றம் இந்தியா முழுவதும் பற்றிக் கொண்டிருக்கிறது. காஷ்மீரைக் காப்பாற்றுங்கள் என்கிற குரல்கள் சமூகவலைதளங்களில் ஏராளமாகக் கேட்கின்றன.

Leave a Response