ஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்

ஒற்றைத் தீர்ப்பாய விசாரணைக்கு காவிரி வழக்கை விட முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே குடும்ப அட்டை – புதுதில்லியில் மட்டும் ஒரே அதிகார மையம் என்ற ஒருமைவாதக் கொள்கையுடைய பா.ச.க. ஆட்சி, இப்பொழுது இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுகளை விசாரிக்க ஒற்றைத் தீர்ப்பாயம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள “மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956”-ஐ இரத்து செய்கிறது. அச்சட்டப்படி தண்ணீர் பகிர்வில் சிக்கலுக்குரிய மாநிலங்களுக்கு மட்டும் தனியே தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் மூலம்தான் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, இரவிபியாஸ் போன்ற பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

கடந்த 2017 மார்ச் மாதம், இந்த ஒற்றைத் தீர்ப்பாய முன்மொழிவை நாடாளுமன்ற மக்களவையில் நிதி மசோதாவாக முன்மொழிய நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருந்தார்கள். காவிரித் தீர்ப்பாயம் 2007 இலேயே இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்ட நிலையில், காவிரி வழக்கையும் அந்த ஒற்றைத் தீர்ப்பாயத்தின் புது விசாரணைக்கு அனுப்புவது என்று முன்மொழிந்திருந்தார்கள்.

இதையறிந்த காவிரி உரிமை மீட்புக் குழு, அதற்குக் கண்டனம் தெரிவித்து ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற சட்டம் கொண்டு வரக்கூடாது என்று என் தலைமையில் 2017 மார்ச் 28 லிருந்து 19 நாட்கள் – தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இரவு பகலாக உழவர்களும், உணர்வாளர்களும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். வெளி மாவட்டங்களிலிருந்து தமிழ் நாட்டின் உரிமைகள் மீது அக்கறையுள்ள இளைஞர்கள் – ஆண்களும் பெண்களும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வேளாண் அமைச்சர் அவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அனைத்துக்கட்சித் தலைவர்களும், பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் காத்திருப்புப் போராட்டப் பந்தலுக்கு நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்து ஆதரவு நல்கினர்.

ஒற்றைத் தீர்ப்பாயம் கூடாது என்ற இந்தக் காத்திருப்புப் போராட்டம் நாடாளுமன்றத்திலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது. இவ்வாறு நடுவண் மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை அப்போராட்டம் ஈர்த்தது. மக்களவையின் நிகழ்ச்சி நிரலில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவு அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.

இப்பொழுது, அந்த ஒற்றைத் தீர்ப்பாய சட்டத்தை நிறைவேற்ற நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் முன்மொழியப் போவதாக அறிவித்துள்ளது.

ஒற்றைத் தீர்ப்பாயம் என்பது, ஆறுகளில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளைப் பறிப்பது ஆகும்; அத்துடன் மாநிலக் கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகளை நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு போகும் நோக்கமுடையதாகும்! ஆற்று நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு, வேளாண் பாசனத்திற்கும், குடிநீருக்கும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கமுடையது.

எனவே, இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற முன்மொழிவை காவிரி உரிமை மீட்புக் குழுக் கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் எதிர்க்க வேண்டும்.

காவிரி வழக்கில் தீர்ப்பாயம் 2007 இல் இறுதித் தீர்ப்பு வழங்கி, அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வால் 16.02.2018இல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதித் தீர்ப்பு 15 ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும், இதை யாரும் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தைவிட மேலதிகாரம் கொண்டதாக ஒற்றைத் தீர்ப்பாயம் இருக்க முடியாது!

எனவே, காவிரிச் சிக்கலை புதிதாக அமையவுள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்தில் வழக்காக மாற்றுவதற்கு சட்டப்படியான வாய்ப்பு எதுவுமில்லை!

அதேவேளை, இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் ஆறுகளின் மீது மாநிலங்களுக்கு உள்ள உரிமையைப் பறிப்பது, ஆறுகளை தனியாரின் வணிகப் பொருளாக மாற்றுவது போன்ற சனநாயக விரோத – மக்கள் விரோதத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த ஒற்றைத் தீர்ப்பாய முன்மொழிவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response