காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நடந்தது என்ன? – விளக்கம் கேட்கும் பெ.மணியரசன்

காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு சரியாக வாதிட்டதா? என்பது குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இன்று (28.5.2019) புதுதில்லியில் நடுவண் நீர்வளத்துறை தலைமை அதிகாரி திரு. மசூத் உசேன் அவர்கள் தலைமையில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்த முடிவினைத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது,

வரும் சூன் மாதம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 9.2. டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டியிருப்பதாக அறிவித்தார்.

கடந்த டிசம்பரிலிருந்து மே (2019) வரை 19.5 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். டிசம்பர் 7.3. டி.எம்.சி, சனவரி 3.00 டி.எம்.சி., பிப்ரவரி – மார்ச்சு, ஏப்ரல் – மே மாதங்களுக்குத் தலா 2.3 டி.எம்.சி திறந்திருக்க வேண்டும். இந்த பாக்கித் தண்ணீரைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் கேட்டதாகத் தெரியவில்லை. திரு.பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் இதுபற்றிக் கூறவில்லை.

தண்ணீர் ஆண்டு என்பது சூன் மாதம் தொடங்கி மே மாதம் முடிகிறது. 2018 – 2019க்கான தண்ணீர் ஆண்டில் டிசம்பர் முதல் மே மாதம் வரையில் தமிழ்நாடு பெற வேண்டிய தண்ணீரை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பு ஏன் கேட்கவில்லை? கேட்டோம் என்றோ அல்லது கேட்கவில்லை என்றால் அதற்குரிய காரணத்தையோ தமிழ்நாடு அரசு வெளியிடவேண்டும்.

சூன் மாதம் நான்கு தவணைகளில் திறந்துவிட வேண்டிய தண்ணீர் பற்றி கர்நாடகத் தரப்புக் கருத்துக் கூறும்போது, பருவமழை நன்றாக இருந்தால் திறந்துவிடுகிறோம் என்று சமாளிப்பாகக் கூறியுள்ளார்கள். 9.2 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகம் ஒப்புக்கொண்டதாக இதை எடுத்துக் கொள்ளமுடியாது. கடந்த கால அனுபவங்கள் மிகவும் கசப்பானவை.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவிற்கும் முழு நேரப்பணியாகக் கொண்ட அதிகாரிகளை அமர்த்த வேண்டும் என்றும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பெங்களூரில் நிறுவப்படவேண்டும் என்றும் தமிழ்நாட்டுத் தரப்பு அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தினார்களா என்பது பற்றி பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறவில்லை.

இக்குறைபாடுகள் பற்றி பொதுப்பணித்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் சந்தேகங்களைப் போக்க தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.

இனியாவது கடந்த டிசம்பரிலிருந்து திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுபடி ஆணையிட வேண்டுமென்று மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response