இபிஎஸ் ஓபிஎஸ் நல்லவர்கள் மு.க.ஸ்டாலின் தீயவர் – இராமதாசு மடல்

பாட்டாளி மக்கள் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, தம் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடல்…..

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும் போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்த வில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான்…… நீங்கள் மட்டும் தான்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கியது. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது முதல் இலக்கு. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் நமது இரண்டாம் இலக்கு ஆகும். முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாவது இலக்கு நமக்கு சாத்தியமாகியிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன. இதன்மூலம் தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போனது பின்னடைவு தானே என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். அது பின்னடைவு தான். ஆனால், அதற்கு காரணங்கள் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகவும் அற்புதமான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, மது ஒழிப்பு, கிராமப்புற வளர்ச்சி, கிராமங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்களுடன், ஏழைகளுக்கு மாதம் ரூ.2000 நிதி உதவி, வேளாண் கடன் மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட சமூகப்பாதுகாப்புத் திட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது.

அதேபோல், தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் நோக்கம் கொண்ட ஹைட்ரோ கார்பன் திட்டம், சென்னை& சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான போராட்டங்களை நடத்திய கட்சி பா.ம.க. தான் என்பதை தமிழக மக்கள் தயக்கமின்றி ஒப்புக் கொள்வர். 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரத்து செய்ய வைத்தது பாமக தான். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த வகையிலும் குரல் கொடுக்காத & போராட்டம் நடத்தாத திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத விஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மதியால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாக்குறுதிகள் மதுவாக மாறி மக்களை மயக்கின; ஏமாற்றின.

பாட்டாளி மக்கள் கட்சி மீதும், அதன் கூட்டணிக் கட்சிகள் மீதும் அடிப்படை ஆதாரமில்லாத அவதூறு குற்றச்சாட்டுகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சுமத்தின. ஊடகங்களும் உண்மைகளை அறியாமல் பாமகவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு துணை நின்றன. பொய்களின் துணையுடனும், பொல்லாங்குகளின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட மாய வளையத்தில் மக்களைக் கொண்டு வந்து அவர்களின் வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி. இது தற்காலிகமான வெற்றியே. மக்கள் உண்மையையும், நன்மையையும் உணரும் போது வெற்றி நம் வசமாகும். அதற்கு அதிக காலம் ஆகாது.

பாட்டாளி மக்கள் கட்சி மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த காலங்களில் தான் தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைத்துள்ளன; திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளித்து வரும் 108 அவசர ஊர்தித் திட்டமாக இருந்தாலும், சேலம் தொடர்வண்டிக் கோட்டம் உள்ளிட்ட தொடர்வண்டித் திட்டங்களாக இருந்தாலும் அவை பாட்டாளி மக்கள் கட்சியின் உழைப்பால் கிடைத்தவை. மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு ஆகியவையும் பாட்டாளி மக்கள் கட்சி மூலம் கிடைத்த பரிசுகள் தான். அதன்பின் 2009-14 காலத்தில் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்திருந்தாலும் தமிழக நலன் காக்கும் வகையில் எந்த முக்கியத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்பது தான் வரலாற்று உண்மையாகும்.

நடப்பு மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் மீண்டும் அமையவுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துணையுடன், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்றியிருக்கும். ஆனால், தேசிய அளவில் படுதோல்வி அடைந்து, தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள திமுக – காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும்? என்று தெரியவில்லை. மத்தியில் அதிகாரத்தில் இருந்த போதே, தங்களை மற்றும் வளப்படுத்திக் கொண்டு மக்களுக்காக எதையும் செய்யாத திமுக, இப்போது எந்த அதிகாரமும் இல்லாத சூழலில் எதை சாதிக்க முடியும்? அந்த வகையில் பார்த்தால், தமிழகத்தில் அதிமுக & பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம்; வெற்றி பெறுவோம். கடந்த தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்த அளவுக்கு தோல்விகளையும் பரிசாகப் பெற்றுள்ளோம். அப்போதெல்லாம் முடங்கி விடாமல் பாட்டாளிகளாகிய உங்களின் உழைப்பால் மீண்டெழுந்து வந்திருக்கிறோம். இப்போதும் உங்களின் உதவியுடன் அது சாத்தியம் தான். ஆகவே, தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம். பாட்டாளிகளாகிய நீங்கள் வீறு கொண்டு எழுந்தால் இனி வரும் தேர்தல்களில் வெற்றி நமதே. கடந்த காலங்களைப் போலவே மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்…. அவர்களின் கரங்களாலேயே மகுடம் சூடுவோம்! கவலை வேண்டாம்!!

Leave a Response