ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது ஜெ அரசு — பழ.நெடுமாறன் கண்டனம்.

பிரபாகரன் சிலைகள், படங்களை வைத்தால் அதனை அகற்றும் போக்கை தமிழக அரசு திருத்திக்கொள்ளாவிட்டால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைவிட வேறு வழியில்லை என்று தஞ்சையில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் எச்சரித்து உள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் 8வது மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறனிடம் பிரபாகரன் சிலை அகற்றியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”தமிழக அரசு தொடர்ந்து பிரபாகரன் சிலைகள், படங்களை வைத்தாலே அதை அகற்றிவிட்டு அவர்கள் மீது வழக்குப் போடுவதை தொடர் கதையாக செய்து வருகிறது.

தமிழக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஜனநாயக உரிமைகளை தமிழக அரசு பறிக்கிறது. ஜனநாயக உரிமையை பறிக்கும் ஒரு அரசு, மக்களின் அரசாக இருக்க முடியாது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அ.தி.மு.க. அரசு பறிப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

அதனால், இனிமேலாவது தமிழக அரசு தனது போக்கை திருத்திக்கொள்ள வேண்டும். அப்படி, திருத்திக்கொள்ளாவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதைவிட வேறு வழியில்லை. இதை தமிழக அரசு உணர வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றார்.

Leave a Response