
பெங்களூருவில் பிற மொழி பேசுவோரால் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
கன்னட சலுவளி கட்சி சார்பில், பெங்களூரில் மைசூரு வங்கி சதுக்கத்தில் திங்கள்கிழமை கன்னட மொழியைக் காக்க வலியுறுத்தி எருமை மாட்டு வண்டி ஊர்வலம் நடத்தி போராட்டம் நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கன்னடர்களின் வாழ்விடமாக திகழும் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் கன்னட மொழியைக் கேட்பது அரிதாகியுள்ளது.
பெங்களூரு மாநகரம் பிற மொழி பேசுவோரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. இதனால், பெங்களூரில் கன்னட மொழிக்கு பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது.
பிற மொழி பேசுவோரின் ஆதிக்கம் அதிகரிப்பதை அனுமதித்தால், அது கன்னட மொழியின் அழிவுக்கு வழிவகுக்கும்.
இதைப் புரிந்துகொண்டு கன்னடர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் கன்னடர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கன்னடர்கள் அதிகளவில் போட்டியிட வேண்டும் என்றார் வாட்டாள் நாகராஜ்.


