நதிகளை இணைப்பது இருக்கட்டும் முதலில் இதைச் செய்வீர்களா ரஜினி?

நடிகர் திரு ரஜினி காந்த் மற்றும் ஒன்றிய அமைச்சர் நித்தின் கட்கரி இருவருக்கும் வேண்டுகோள்:

கடந்த பல மாதங்களாக அமைச்சர் கட்கரி சென்னை வரும் சமயங்களில் எல்லாம் தவறாமல் சொல்லும் வார்த்தை, கோதாவரியையும் காவிரியையும் இணைத்து சென்னை மற்றும் தமிழகத்தின் பற்றாக்குறையை தீர்த்துவைப்போம் என்று. நதிகள் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் அப்படி சொன்ன கட்சிக்குத்தான் தன்னுடைய ஆதரவு என்று ரஜினி தெரிவித்திருந்தார்.

கோதாவரி காவிரி இணைப்பு இருக்கட்டும், முதலில் கிருஷ்ணா நதி குறித்து பார்ப்போம்:-

தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இடையே 1983ஆம் ஆண்டு போடப்பட்ட “கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி” தமிழகத்திற்கு ஆண்டொன்றிற்கு 15டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். அது தமிழகத்தை வந்தடையும்போது 12டிஎம்சி கிடைக்கும்.

குறிப்பிட்ட 12டிஎம்சியில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் 4டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 8டிஎம்சியும் ஆந்திர தரவேண்டும் என்கிறது ஒப்பந்தம்.

1983 ஆம் ஆண்டு தொடங்கிய பணிகள் 1990 ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 1996 ஆம் ஆண்டுதான் பணிகள் ஓரளவிற்கு நிறைவுபெற்றன. 1996 ஆம் ஆண்டு ஆண்டு முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு 288டிஎம்சி தண்ணீர் கிடைத்திருக்கவேண்டும்,ஆனால் கிடைத்தது என்னவோ 76 டிஎம்சி தான்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை தமிழகத்திற்கு கிடைத்திருக்கவேண்டிய 4 டிஎம்சி நீரில் நமக்கு கிடைத்திருப்பது வெறும் 0.8டிஎம்சி மட்டுமே. தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆந்திர அரசை மீதம் தரவேண்டிய நீரின் அளவான 3.2டிஎம்சியை கொடுத்தால் சென்னையின் நீர் தேவையை வரும் செப்டம்பர் அக்டோபர் வரை தாக்குப்புடிக்கமுடியும்.

நடிகர் ரஜினி காந்தும், கட்கரி அவர்களும் ஒப்பந்தத்தின் படி தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய 3.2டிஎம்சி தண்ணீரையாவது பெற்றுத்தருவார்களா? இதை முதலில் நீங்கள் செய்யுங்கள், பிறகு பேசலாம் கோதாவரி-காவிரி இணைப்பைப்பற்றி.

செய்வீர்களா ரஜினி ?

– சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள்

Leave a Response