
தமிழகத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.38 நாடாளுமன்றத் தொகுதிகள், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியனவற்றிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்குப்பதிவு செய்ய பொதுமக்கள் ஆயத்தமாயினர். அதன்படி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயம்பேட்டில் குவிந்தனர்.
நேற்று மாலை 6 மணி முதல் கோயம்பேட்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது. போதுமான பேருந்துகள் இல்லாததால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமல் அவதியடைந்தனர்.
நீண்ட காத்திருப்புக்குப்பின் ஆத்திரமடைந்த அவர்கள் இரவு 12 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அப்போது, “பேருந்துகள் போதுமான அளவில் இல்லை; எங்களுக்குப் போதிய பேருந்துகளை ஏற்பாடு செய்யும்வரை நாங்கள் களையமாட்டோம்’ என உறுதியாகக் கூறினர். இதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வராமல் ஸ்தம்பித்துவிட்டன. நள்ளிரவு என்பதால் பொதுமக்கள் ஊர்களுக்குச் செல்லமுடியாமலும், திரும்பிப் போகமுடியாமலும் தவித்தனர்.
ஆத்திரமடைந்த அவர்கள், `வாக்குப்பதிவு செய்ய போதிய பேருந்துகளைக்கூட இயக்காத அரசுக்கு எங்கள் ஓட்டு இல்லை; இதைக்கூட அவர்களால் சரிவர செய்துதரமுடியவில்லையா?’ என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் போட்டவாறே மறியலில் ஈடுபட்டனர். `சமூக கடமை ஆற்றக்கூட அரசு உதவவில்லை; இவர்களை நம்பி எப்படிவாக்களிப்பது” என இளைஞர்கள் கொந்தளித்தனர். இதனால் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. பேருந்து பற்றாக்குறை காரணமாக, மாநகரப் பேருந்துகள் வெளியூர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன.
அதிகாலை 2 மணிக்குப் பிறகு நிலைமை சுமுகமடைந்தது.
நள்ளிரவில் கோயம்பேட்டில் நடந்த இந்நிகழ்வு அதிமுக கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு.


