வடக்கிலும் தோல்வி பயம் – ம.பி யில் வருமானவரித்துறையை ஏவிய மோடி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாக வருமானவரித்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மோடி அரசு மிரட்டி வருகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக மத்ஹ்டியபிரதேசத்தில் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

கடந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. கமல்நாத் முதலமைச்சர் ஆனார்.

தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில், கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் ‘ஹவாலா’ பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் 7 அதிகாலை 3 மணியளவில் கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து வருமான வரி சோதனை தொடங்கியது. டெல்லி, மத்தியபிரதேச மாநில தலைநகர் போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் சுமார் 50 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடைபெற்றது.

இதில், சுமார் 300 வருமான வரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மத்தியபிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி பிரவீன் காக்கர் தொடர்புடைய இடங்களில் டெல்லியில் இருந்து வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தூர் நகரில் உள்ள காக்கர் இல்லம், போபால் நகரில் உள்ள அவரது இல்லம் மற்றும் அவர் தொடர்புடைய இதர இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது. அவற்றை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

பிரவீன் காக்கர், முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவார். கடந்த டிசம்பர் மாதம், கமல்நாத் முதலமைச்சர் ஆனவுடன், அவருடைய சிறப்பு அதிகாரியாக காக்கர் நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, அவர் பதவி விலகினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின்போது, மத்திய மந்திரியாக இருந்த காந்திலால் பூரியாவிடமும் பிரவீன் காக்கர் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.

அவரது குடும்பம், ஓட்டல் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், முதலமைச்சர் கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர மிக்லானி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

கமல்நாத்தின் மைத்துனருடைய மோசர் பேர் நிறுவனம், மற்றொரு உறவினர் ரதுல் பூரியின் நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

கமல்நாத்தின் உறவினர் ரதுல் பூரிக்கு ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கிலும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால் அவரிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தினர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் பரஸ் மால் லோதாவுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. அங்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சோதனைகளில், கணக்கில் காட்டப்படாத ரூ.9 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

இந்த வருமான வரி சோதனை,அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் ஊடகப்பிரிவு துணைத்தலைவர் பூபேந்திர குப்தா குற்றம் சாட்டினார்.

Leave a Response