விஜயகாந்த் பேசுவாரா? மாட்டாரா? – சுதீஷ் வெளியிட்டுள்ள முதல்தகவல்

தேமுதிக தலைவர் விஜய்காந்த் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பியதிலிருந்து இதுவரை எதுவும் பேசவில்லை. அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை பல்வேறு தரப்பினர் அவரைச் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அவர் பேச்சு எதுவும் வெளிவரவில்லை.

அவர் பேசுவாரா? என்பது பற்றியும் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.இப்போது முதன்முறையாக அது பற்றி தகவல் தெரிவித்துள்ளார் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக கட்சியின் துணைச் செயலாளருமான எல்.கே.சுதீஷ்.

அவர் ஆங்கில நாளேடொன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில்,

விஜய்காந்த் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என்றும் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரையின் போது விஜயகாந்த் அவர்களால் பேச இயலாது என்று கூறியிருக்கும் சுதீஷ், எனினும் அவர் வந்தாலே போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இன்னொரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில்,

அதிமுக – பாஜக கூட்டணியில் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் விரும்பிய தொகுதிகள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

8 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் கேட்டு கிடைக்கவில்லை என்ற போதிலும் தாங்கள் விரும்பிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகள் கிடைத்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக தங்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Response