தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். பிப்ரவரி 14 அன்று அவர் சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய அவரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பிப்ரவரி 22 அன்று ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின்
ஆகிய இருவரும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் அரசியல் இருந்ததாகக் கூறப்பட்டாலும்,“ஒரு துளிகூட சந்திப்பில் அரசியல் இல்லை” என இருவரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
விஜயகாந்தை ரஜினிகாந்த் சந்தித்தபோது, சமீபகாலமாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அரசியல் பேச்சுகள் குறித்தும் ரஜினி பேசியுள்ளார்.
விஜய்பிரபாகரன் தற்போது, அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு மேடையிலும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, ரஜினி விஜயகாந்த் குடும்பத்துடன் பேசும் புகைப்படத்துடன் விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதில், “நான் அரசியல் மேடைகளில் பேசியதை பார்த்ததாக ரஜினி அங்கிள் என்னிடம் சொன்ன தருணம் சிறப்பான ஒன்று. மேடைகளில் நான் பேசிய விதம் குறித்து சொல்லி ஆச்சரியப்பட்டார். அது குறித்து சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டார். கண்டிப்பாக அங்கிள் இனியும் நான் நன்றாக வேலை செய்வேன்” எனக் கூறியுள்ளார்.
விஜய்பிரபாகரனின் இந்தப் பதிவு தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
இதிலிருந்து ரஜினி, சமூக வலைதளங்களைத் தீவிரமாகக் கவனித்து வருகிறார் என்பதும் தெரியவருகிறது.