மிக மிக அவசரம் சமூகப் பொறுப்புள்ள படம் – பாரதிராஜா பாராட்டு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் திரைமுன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சனவரி 30,2019 அன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பாரதிராஜா, பாக்யராஜ்,சேரன்,சீமான், ஜேகே ரித்தீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசியதாவது….,

எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையைப் பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படித்தான் பேசுவேன். இந்தப் படத்தை பற்றி, படக்குழுவினரைப் பற்றி இந்தப் படத்தின் வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும்.

படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள். ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.

நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தைப் பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும். சின்னப் படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம் என கூறினார்

திரைமுன்னோட்டத்தை வெளியிட்டுவிட்டு இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,

நாங்கள் கலைஞர்கள். எங்களுக்கு எல்லா முகமும் உண்டு. என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்தவன்தான் மிகமிக அவசரம் என்கிற இந்த சமூக அக்கறையுள்ள படத்தின் கதையையும் எழுதி இருக்கிறான். இந்தப் படம் பார்க்கும் வரை சுரேஷ் காமாட்சியை ஒரு சாதாரண தயாரிப்பாளர் என்கிற அளவிலேயே அறிந்திருந்தேன். ஆனால் இந்தப் படம் பார்த்துவிட்டு நிஜமாக நீதான் இந்தப் படத்தை இயக்கினாயா? என்று கேட்டேன். அப்புறம் தான் தெரிந்தது சுரேஷ் காமாட்சி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பது.

எல்லா மேடைகளிலும் சுரேஷ் காமாட்சி பிரச்சனைகளை பேசுகிறான் என்கிறார்கள். பிரச்சனைகளை கிளப்பாதவன் மனிதனே இல்லை. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி சரியாக இருப்பதால் தான் அப்படிப் பேசுகிறான். அதனால்தான் சமூகப் பொறுப்புடன் இப்படி ஒரு படம் எடுத்துள்ளான்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களைப் பார்க்கும்போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்களே என நினைக்கும்போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார். வசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலும் முகபாவத்தாலும் மிக அற்புதமான நடிப்பைக் கொடுத்து இந்தப் படத்தைத் தாங்கிப் பிடித்து இருக்கிறார் நாயகி ஸ்ரீ பிரியங்கா. வழக்கு எண் முத்துராமனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், எழுந்துபோய் அடிக்கத் தோன்றும் விதத்தில் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.

சமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன் அதில் கலந்துகொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் தொழில்துறையில் முதலீடு முதலீடு செய்துள்ளோம். அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கும் 30% இடங்கள் வேண்டுமென குரல் கொடுக்கிறோம் என என்னிடம் கூறினார்கள். அப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம். இந்தத் தீ இன்னும் அணையவில்லை. இங்கே முன்பு பல பட்டறைகள் போட்டிருந்தார்கள். அதில் பலபேர் கிளம்பிவிட்டார்கள் இன்னும் சில பட்டறைகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன.

தென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு பிலிம் சேம்பர், தமிழ் நடிகர் சங்கம் என பெயரை மாற்ற 25 வருடங்களாகப் போராடி வருகிறோம் இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று கூறினார் பாரதிராஜா

Leave a Response