விஷால் மீது பாரதிராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ஏ.எல். அழகப்பன், கே.ராஜன், எஸ்.வி.சேகர், ரித்திஷ், சக்தி சிதம்பரம், தியாகராஜன் உள்ளிட்டவர்கள் நேற்று (டிசம்பர் 20) சந்தித்தனர்.

அப்போது அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

1,300 உறுப்பினர்களைக் கொண்ட சங்கத்தில் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு தலைவராக விஷால் பொறுப்பேற்றார். அவர் தலைமையிலான நிர்வாகம், கூட்டுறவு சங்கப் பதிவுச் சட்டத்தின்படியும், சங்க விதிகளின்படியும் செயல்படவில்லை. இதனால் சங்கத்தின் எதிர்கால நலன் கேள்விக்குறியாக உள்ளது.

சங்க நிர்வாகக் குழுவில் உள்ள துணைத் தலைவர்கள் 2 பேர் ( இயக்குநர் கவுதம்மேனன், நடிகர் பிரகாஷ்ராஜ் ) கடந்த 15 மாதங்களாக வரவில்லை. அவர்கள் எந்த வகையிலும் செயல்படவில்லை. செயற்குழு மாதந்தோறும் நடத்தப்படவில்லை. செப்டம்பருக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அதுவும் கூட்டப்படவில்லை.

பொதுக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கடந்த சங்க நிர்வாகம் விட்டுச் சென்ற காப்பு நிதியான ரூ.7.85 கோடி தொகை, பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் செலவு செய்யப்பட்டுள்ளது.

சங்க நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டும். அதற்காக சிறப்பு அதிகாரி (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி) தலைமையில் தற்காலிக நிர்வாகக் குழு அமைத்து, சங்கக்கணக்குகளை கேட்க வேண்டும். 4 மாதங்களுக்குள் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சரைத் தொடர்ந்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் சந்தித்து தயாரிப்பாளர்கள் மனு அளித்தனர்.

அதன்பின் இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது….

தயாரிப்பாளர் சங்கத்துக்கு விதிகள் உள்ளன. அதன்படி பொதுக்குழுவைக் கூட்டவில்லை. 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. சங்கத்துக்கான அறக்கட்டளை சார்பில் ரூ.7 கோடி தொகை இருந்தது. ஆனால் அந்தத் தொகை என்ன ஆனது என்று கேள்வி கேட்டால் சங்கத் தலைமையில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கணக்குகள் அனைத்தும் பதிவு அலுவலகத்தில் இருக்க வேண்டும். அங்குதான் விவாதம் நடத்தி முடிவுகள் எடுக்கவேண்டும். ஆனால் விஷால் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் தன்னிச்சையாக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அங்குதான் சங்கம் செயல்படும் என்று கூறியது அவமானமாகும்.

இதில் ஏதோ ஒரு மறைவு உள்ளது. சங்க நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. சங்கம்தான் வாடகையைச் செலுத்துகிறது. அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? இதுதான் கேள்வி.

சங்கக் கணக்குகளைப் பற்றிக் கேள்வி எழுப்புவதற்காக அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் தலைவரோ, செயலாளரோ யாருமே வரவில்லை. எனவே அந்தக் கட்டிடத்தை பூட்டிவிட்டோம். அதனால் பிரச்சினை எழுந்துள்ளது. அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசை அணுகியிருக்கிறோம்.இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்து தீர்த்துத் தருவோம் என்று அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதிராஜா உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் காவல்துறையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விஷால் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.

Leave a Response