ஜிஎஸ்டியால் அவதியுறும் திருப்பூர் பனியன் தொழில் – நிவர்த்திக்காக நிதியமைச்சரை சந்தித்த சத்யபாமா

திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா 19.12.2018 அன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேய்ட்லியை நேரில் சந்தித்து தொகுதி பிரதான தொழிலான பின்னலாடைத் தொழில் நலனுக்கான கோரிக்கைக்கடிதங்கள் அளித்துள்ளார்.

அவற்றின் விவரம்….

கடிதம் 1:

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்களில் 80% சதவிகித நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வகையைச் சார்ந்ததாகும்.

அந்நிறுவனங்கள் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பின்னலாடையை ஏற்றுமதி செய்து வருகின்றநர். இந்நிறுவனங்கள் வாராக் கடன் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சில பிரச்சனைகளால் பெரிதும் அவதியுறுகின்றன.

ROSL தொகை, Duty Drawback, ஜி எஸ் டி தொகை திரும்பச்செலுத்துவது, ஆகியவற்றின் கால தாமதம் காரணமாக ஏற்றுமதி யூனிட்டுகள் வங்கிகளிடம் பெற்ற கடனைச் செலுத்துவதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன.

இவற்றின் மூலமாக அரசிடம் இருந்து வரவேண்டிய தொகை வராமல் வங்கிக் கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் போராடி வருகின்றன, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி யூனிட்டுகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை 1200 கோடி ரூபாயாகும்.

வங்கிகள் பின்பற்றும் BASEL-3 விதிமுறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தலாம். ஆனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பின்பற்றுவது அவற்றுக்கு சிரமம் தருவதாக உள்ளது. மேலும் அவற்றுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளில் கால தாமதத்தை தவிர்க்கவேண்டும், அவ்வாறான நிலுவைத் தொகைகளை உரிய காலத்தில் திரும்பப்பெறாதது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தவறாக அமையாது.

எனவே சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் அளிப்பதற்கான கால அவகாசத்தை 31.12.2018 வரையில் 90 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரையும் பின்னர் ஜிஎஸ்டி விதிமுறைகளின் கீழ் நிலைபெற அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிரத்யேகமான BASEL 3 விதிமுறைகளுக்குப் பதிலாக உரிய திட்டத்தை வகுக்குமாறும்,வங்கிகளுக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை பாதுகாக்குமாறு அறிவுறுத்தக் கோரியும் அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

கடிதம் 2:

நாட்டின் பின்னலாடை ஏற்றுமதிகளில் 90% சதவிகிதத்தை வழங்கும் மிகப்பெரிய ஜவுளி மையமாக விளங்கும் திருப்பூர் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரமாகத் திகழ்கிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்குள், திருப்பூர் நகர பின்னலாடை ஏற்றுமதி அசாத்திய வளர்ச்சி அடைந்தது. 1984 ஆம் ஆண்டு 10 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி அளவு 2017-18 ஆம் ஆண்டில் 30 ஆயிரம் கோடியாக வளர்ந்துள்ளது. முப்பதாண்டுகளில் 30 லட்சத்தில் இருந்து 300 கோடியாக வளர்ந்து சாதனை படைத்துள்ளது.

EPCG திட்டத்தின் கீழ் செய்யப்படும் இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் போதிலும் முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் துணிகள் போன்றவற்றுக்கு நிவாரணம் நீட்டித்து வழங்கப்படவில்லை.

முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் குறிப்பாக துணிகளை திருப்பூரில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி செய்கின்றனர்.

எனவே முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான கிளெய்ம்களை மேற்கொள்ள அனுமதி வழங்கவேண்டும் என்று மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

EGM விவரங்களை ஏற்றுமதி யூனிட்டுகள் தற்போது மேனுவலாக தாக்கல் செய்துவருகின்றன. ஜிஎஸ்டி தொகையை எளிதாகத் திரும்பப்பெறும் வகையில் இதனை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் வசதியை உருவாக்க உதவிட வேண்டும்

இவ்வாறு அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட மத்திய நிதி அமைச்சர் அதுகுறித்து பரிசீலனை செய்து விரைவில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பதிலை தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response