மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா? – காவல்துறைக்கு கமல் கண்டனம்

74 சதவீத வருகைப் பதிவுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதக் கட்டணத் தொகையை முழுமையாக இரத்து செய்ய வேண்டும்.

தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

ஏழை மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட தேர்வுக் கட்டண உயர்வை இரத்து செய்ய வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று பல வாகனங்களில் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.

மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். காலையில் 3 வேன்களில் வந்த மாணவ-மாணவிகளை அவ்வப்போது கைது செய்தனர். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே மேலும் ஏராளமான மாணவர்கள் அங்கு வந்து குவிந்தனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகம் முன்பு முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாணவ-மாணவிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஏற்கனவே கைது செய்த மாணவ- மாணவிகளை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மண்டபத்தில் இருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அவர்களும் இந்தப் போராட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.

அந்த சமயத்தில் பேட்டை கல்லூரியில் இருந்து மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களும் போராட்டக் களத்துக்கு வந்து குவிந்தனர்.

பின்னர் அதிகாரிகள், மாணவ பிரதிநிதிகளை
பல்கலைக்கழக துணை வேந்தரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் மட்டும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் வெளியே வந்தனர். அங்கு தங்களது கோரிக்கை ஏற்கப்படாதது குறித்து மாணவர்கள் மத்தியில் தெரிவித்தனர்.

இதனால் மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மாணவ- மாணவிகள் மீது தடியடி நடத்தினர். இதனால் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போது காவல்துறையிடம் எதிர்த்துப் பேசிய ஒரு சில மாணவ-மாணவிகள் தாக்கப்பட்டனர். மேலும் ஒரு சிலரை தாக்கியவாறு இழுத்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இந்த தடியடி சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்த சம்பவத்தால் பல்கலைக் கழக வளாகம் முன்பு உள்ள நெல்லை-தென்காசி ரோட்டில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Leave a Response