
கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, நெல்லையில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது தேர்தல் செலவுக்காக சென்னையிலிருந்து நெல்லைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 4 கோடி ரூபாயை தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
ஆனால், அந்தப் பணம் தனக்குச் சொந்தமானது இல்லை என மறுத்தார் நயினார் நாகேந்திரன். இது சம்பந்தமான வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில்,அதேபோல் இன்னொரு சிக்கலில் நயினார் நாகேந்திரன் சிக்கி மீண்டதாகச் சொல்லப்படுகிறது.
அது என்ன?
டிசம்பர் 8 ஆம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் மண்டல, மாவட்ட, கோட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதன் முடிவில், எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்ட கட்சி ஊழியர்களின் செலவுகளுக்காகவும், டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பயிற்சிப் பயிலரங்கம், தேர்தல் களப்பணி ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியனவற்றை நடத்துவதற்காகவும் கோட்டம் வாரியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது
இதில், மற்ற கோட்டங்களுக்கான பணம் எல்லாம் பத்திரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டதாம்.நயினாரின் நெல்லைக் கோட்டத்துக்கு அனுப்பப்பட்ட பணம் 10.50 இலட்சம் மட்டும் காவல்துறையிடம் சிக்கி இருக்கிறது.
நெல்லை மண்டல சட்டப்பேரவைத் தொகுதிகளின் அமைப்பாளரும் நயினார் நாகேந்திரனின் நண்பருமான நீலம் முரளி யாதவ் தான் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு 9 ஆம் தேதி அதிகாலை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்குப் புறப்பட்ட வந்தே பாரத் வண்டியில் பயணம் செய்திருக்கிறார்.
அந்த வண்டி, திண்டுக்கல்லை அடைந்தபோது, திடீரென வண்டியில் ஏறிய காவல்துறையினர், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகை கொண்டு செல்லப்படுவதாக தங்களுக்குக் தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லி பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டுள்ளனர்.
சோதனையில், நீலம் முரளி யாதவ்விடம் இருந்த பெட்டியில் ரூ.10.50 இலட்சம் சிக்கி இருக்கிறது. அந்தப் பணம் எதற்காகத் தரப்பட்டது? என்பதற்கான ஆவணங்களை முரளி எடுத்துக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
அதன்பின்,அவரைக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் அழைத்துப் போயிருக்கிறார்கள்.
அங்கு, அந்தப் பணம் குறித்து முரளியிடம் முழுமையாக விசாரணை நடத்தியபிறகு பணத்தை திருப்பிக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்களாம்.
ஏற்கெனவே, நயினார் தரப்பு 4 கோடி ரூபாயை எடுத்துச் சென்றதை பாஜகவில் இருக்கும் அவரது எதிரிகளே சிக்கவைத்தார்கள் என்று சொல்லப்பட்டது.
இப்போதும் அப்படியே நடந்திருக்கிறது.
இம்முறை,இதுகுறித்து காவல்துறையிடமிருந்து ஊடகங்களுக்குச் செய்தி போகவில்லை என்றதும் எதிர்த்தரப்பினரே இந்தத் தகவலை ஊடகங்களிடம் சொல்லியும் இருக்கிறார்கள்.அதனால் ஒரு சில ஊடகங்களில் மட்டும் இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது. இதனால் நயினார் நாகேந்திரன் தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.


