தமிழக அரசு தமிழ்மக்களுக்கு எதிராக அப்பட்டமாகச் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்தி பூவுலகின்நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்….
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்திருக்கிறார். அப்போது தமிழக அரசு சார்பில் 13 அம்சங்கள் கொண்ட கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கோரிக்கை எண் 10 மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு (ஹைட்ரோகார்பன்) குழாய்களை பதிக்கும் பணிக்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்துவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், எனவே மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தாமலேயே அத்திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கான கருத்து கேட்புக் கூட்டங்களில் அரசியல் கட்சிகளும், அரசுசாராத அமைப்புகளும் கலந்து கொண்டு இக்கூட்டங்களை சுமூகமாக நடத்தவிடாமல் செய்வதாக அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம், அரசுக்கு வகுத்துள்ள நெறிமுறைகளை நினைவில் கொள்வதில்லை என்பதோடு, அந்த நெறிமுறைகளுக்கு எதிரான திசையிலேயே ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுகின்றன.
இந்நிலையில் குடிமக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் செயலையே அரசியல் கட்சிகளும், அரசுசாராத அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 51(A)(g) “இந்நாட்டின் இயற்கை வளங்களையும், காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டுயிர்கள் ஆகியவற்றை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் குடிமக்களின் கடமை” என்று கூறுகிறது.
ஆனால் அரசியல் கட்சிகளிலும், அரசுசாராத அமைப்புகளிலும் செயல்படும் இந்நாட்டு குடிமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்களுக்கு அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமைகளை செய்யக்கூடாது என்று கூறும் ஒரு அரசை, “அரசமைப்புச் சட்டவிரோத அரசாக” மட்டுமே கருத முடியும்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் சில அம்சங்களை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடப்பது மக்களாட்சி. மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் ஆட்சி. இந்த ஆட்சி மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிறது. தங்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் ஒரு திட்டம் குறித்த கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு வரி செலுத்தும் மக்களுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது என்ற கோரும் ஒரு அரசு மக்களாட்சி அரசாக இருக்க முடியாது.
நாட்டின் விளைநிலங்களை எண்ணெய் வயல்களாகவும், எரிவாயு வயல்களாகவும் மாற்றியமைத்தால் இந்த நிலங்கள் உயிர்ப்பிழந்து பாலை நிலமாகும். பாலை நிலத்தில் வறட்சி, வறுமை, வன்முறை உள்ளிட்ட சட்ட-சமூக விரோத நடவடிக்கைகளே நடக்கும் என்று தமிழ்நாட்டின் பள்ளிப்பாடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் விளைநிலங்களை பாலையாக்கும் பணியில் தமிழ்நாட்டு அரசே முனைந்து நிற்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூட மக்களுக்கு வாய்ப்பே அளிக்கக் கூடாது என்று கூறுவதும் வியப்பானது மட்டுமல்ல; வேதனையானது!
மக்களை மதிக்காத அரசுகள் காலவெள்ளத்தில் தூக்கி எறியப்படுவதுதான் வரலாறு. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் அனைவரும் காலத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதும்கூட வரலாறாக பதிவாகி உள்ளது.
அரசுக்கு அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமைகளை மறந்துவிட்ட ஒரு அரசின் அமைச்சர், குடிமக்கள் தங்கள் அரசமைப்புச் சட்டக் கடமைகளை செய்யக்கூடாது என்று கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர், மத்திய அரசுக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவின் 10 ஆவது கோரிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.