மீண்டும் ஒரு தூங்கா இரவு – உணர்ச்சிப் பெருக்கில் திமுக தொண்டர்கள்

கடந்த பத்துநாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேற்று (ஆகஸ்ட் 6) மாலை 6.30 மணி அளவில், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

அவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முதன்முறை பின்னடைவு என்று சொல்லப்பட்ட அறிக்கை வெளியானதால் பதற்றமடைந்த திமுக தொண்டர்கள் கருணநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வர தொடங்கியதால் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள் மற்றும் அவரது மகள் கனிமொழி நேற்றிரவு முழுவதும் காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்து கருணாநிதியின் உடல்நலத்தை கவனித்து வந்தனர்.

கருணாநிதி நலம்பெற்று நிச்சயம் நல்ல உடல்நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு தாங்கள் இருப்பதாக ஊடகங்களிடம் கூறிய திமுக தொண்டர்கள் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு தாண்டியும் மருத்துவமனையின் முன்பு கால்கடுக்கக் காத்திருக்கின்றனர்.

‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும், பிறவியிலேயே போராளியான கருணாநிதி, தன் வாழ்க்கை முழுக்க சந்தித்த பல போராட்டங்களையும் ஏணிப்படிகளாய் மாற்றி உச்சம் தொட்டவர். அவர், விரைவில் தொண்டர்களை பார்த்து கையசைப்பார், அவர் பூரண நலம் பெற்று விரைவில் கோபாலபுரம் இல்லம் செல்வார் என மருத்துவமனை முன்பு குவிந்துள்ள திமுக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

தொண்டர்கள் கூட்டமும் அவர்களின் உணர்ச்சிப் பெருக்குகளும் விடிய விடிய தொடர்ந்தது. விடிந்தும் அப்படியே இருக்கிறது. அதில் பின்னடைவே இல்லை. இதுவே கலைஞரைக் காப்பாற்றும்.

Leave a Response