
ஏப்ரல் 25 அன்று பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 38வது நினைவுப் பேருரையில் கலந்து கொண்டு ‘யுத்தம் இல்லையென்பது சமாதானமாகிவிடாது’ என்ற தலைப்பில் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா உரையாற்றினார். அப்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தந்தை செல்வா அவர்களை எனக்குத் தெரியும். எனது தந்தையாருடன் வந்து பேசியபோது அவரை நான் சந்தித்திருக்கிறேன்.
டாக்டர் நாகநாதனுடைய கடைசி மகள் எனது நண்பியாகவிருந்த காரணத்தினாலே அங்கே நேரம் செலவிடுகின்ற போது, சிலவேளை அங்கேயும் அவரை சந்தித்திருக்கின்றேன். அவரையொரு நேர்மையான அரசியல்வாதியென நாம் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.
இன்று அவருடைய நினைவுப் பேருரையினை வழங்குகின்ற போது இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான பிளவுகள், பிரச்சினைகள் உலகில் ஏற்படுகின்றதைப் பற்றி சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கின்றேன்.
அப்படியான பிளவுகள், பிரச்சினைகளுக்கான காரணங்கள், அவற்றை தீர்த்துக் கொள்வதற்கான சில வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
இலங்கையை நாம் எடுத்து நோக்குவமேயானால், 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த நாள் முதல் பெரும்பான்மை இனம் தன்னுடைய ஆதிக்கத்தால் மற்றவர்களை புறக்கணித்து அதிகாரங்களை தம்முடைய கைகளில் வைத்துக் கொண்டதன் காரணமாக பலவித பிரச்சினைகள் எழுந்தன.
இனங்களுடைக்கிடையில், மொழிகளுக்கிடையில், மதங்களுக்கிடையிலான புறக்கணிப்புக்களினாலும் அனைவரையும் இணைத்துக் கொள்ளாத ஒரு மனப்பாங்கிலும் இந்தப் பிரச்சினைகள் எழுந்தன. இவ்வாறான பல சம்பவங்கள் இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்றன.
அனைவரையும் இணைத்துக் கொள்ளாமல், பெரும்பான்மையினராக இருக்கின்ற காரணத்தினாலேயே மற்றவர்களை புறக்கணித்து பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி செய்ததனால் சிறுபான்மை இனத்தவர்கள் தமது பிரச்சினைகளை முன்கொணர வேண்டி ஏற்பட்டது.
இதன் காரணமாகத்தான் பல இடங்களில் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க முடியாத நிலையில் அவர்கள் வன்முறையை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
ஓர் இனத்தின் மனதிலேயிருந்த எதிர்பார்ப்புகள் தகர்க்கப்படுமாக இருந்தால் அது வெடிகுண்டாக மாறும் என்று ஓர் அறிஞர் கூறியிருக்கின்றார். பெரும்பான்மை இனம் தம்முடைய அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.
அதாவது, மற்றவர்கள் எதிரிகள் என்ற பிரசாரத்தை மேற்கொண்டு அவர்களை எதிரிகளாக சித்திரித்து அதன் மூலமாக பெரும்பான்மை இனத்தவர்களுடைய அதிகார பலத்தை தாங்கள் வைத்துக் கொள்கின்ற ஒரு யுக்தியை பல நாடுகளிலே கையாள்வதை காணக்கூடியதாக உள்ளது. இலங்கையிலும் அதுதான் நடந்துள்ளது.
சுதந்திரமடைந்த காலந்தொட்டு வடக்கு மற்றும் கிழக்கு மக்களுடைய புறக்கணிப்பு பல விதங்களிலே இருந்தன. பொருளாதாரமாக இருக்கலாம், அரசியல் அதிகாரமாக இருக்கலாம், அவர்களுடைய மேற்படிப்பாக இருக்கலாம், வேலைவாய்ப்பாக இருக்கலாம் இவையனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு அவர்கள் வெளியில் விடப்பட்ட காரணத்தினால், இங்கேயும் வன்முறைகள் ஆரம்பித்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது.
பாராளுமன்றத்திலேயும் இவ்வாறு ஜனநாயகத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலேயே இங்கே நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. உண்மையான ஐக்கியம் ஏற்பட வேண்டுமானால் வேற்றுமையை ஏற்றுக்கொண்டு அந்த வேற்றுமையின் சிறப்பை வெளிப்படுத்துகின்ற ஓர் அபிப்பிராயத்தின் மூலமாகத்தான் அந்த ஐக்கியம் ஏற்பட முடியுமே தவிர, வேற்றுமையினால் மாறுபட்டவர்கள், மற்றவர்கள் என்று அடக்கியோ புறக்கணித்தோ ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது.
இன்று நாம் போரிலே வெற்றி பெற்றிருக்கின்றோம். ஆனால் சமாதானத்தினை வெற்றி கொள்ளவில்லை. ஆனால் பல யுத்த வெற்றியாளர்கள் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை என்பதுதான் சரித்திரம்.
ஏனென்றால், சமாதானத்தை வெற்றிகொள்வதற்கு வித்தியாசமான மனப்பாங்கு அவசியம். தாழ்மையாக மற்றவர்களை சேர்த்துக் கொள்கின்ற மாறுபட்ட சிந்தனைகள் அவசியமாக இருக்கிறது.
இந்த நாட்டின் சமூகங்கள் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஜனநாயக முறைப்படி தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பல காலம் உழைத்தார்கள், போராடினார்கள்.
முதலில் சம உரிமைகளை கோரினார்கள். பின்னர் அது கிடைக்காத போது சமஷ்டி ஆட்சி முறையை கேட்டார்கள். அதையும் செவிமடுக்காத போது தனிநாடு கோரினார்கள். இவையனைத்தும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகத்தான் வன்முறை உருவானது
இன்றைக்கு மிகவும் முக்கியமான சரித்திரத்தில் என்றுமில்லாத சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது. அதனோடு வேறு சில கட்சிகளும் கூட அதற்கு ஆதரவாக செயற்படுகின்றன.
இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தி இதுவரைக்கும் நாம் அடைய முடியாதிருந்த அதிகாரப் பகிர்வின் மூலமாக அனைவருக்கும் சம உரித்து ஏற்படுத்துகின்ற ஒரு நிலையை கட்டியெழுப்புவதன் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
போரிலே வென்றதால் சமாதானம் ஏற்படப் போவதில்லை. நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படுவதற்கான வழிமுறையை நாம் ஏற்படுத்தலாம் என நான் நம்புகின்றேன்.
அதற்கான சகல முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
