சூதாட்டமும் இருக்கும், அதுவே மொத்தப்படம் இல்லை– வை ராஜா வை படம் பற்றி ஐஸ்வர்யாதனுஷ்.

ரஜினியின் மகள் தனுஷின் மனைவி என்று ஏற்கெனவே புகழ் பெற்றிருந்தாலும் தன்னுடைய சொந்தத் திறமையை வெளிப்படுத்த இயக்குநராகியிருக்கும் ஐஸ்வர்யா.  ‘3’ படத்தை அடுத்து, இயக்கியுள்ள படம் ‘வை ராஜா வை’.

கார்த்திக் மகன், கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருக்கிறார். ப்ரியா ஆனந்த், டாப்ஸி,  ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களோடு விவேக், டேனியல் பாலாஜி, மனோபாலா,  இயக்குநர் வசந்த் சாய் உட்பட  பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

மே 1ஆம் தேதி ‘வை ராஜா வை’ திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப்படம் பற்றி  இயக்குனர் ஐஸ்வர்யா.ஆர். தனுஷ் சொல்லும்போது, “இது ஜாலியான, கலாட்டாவான கமர்சியல் படம். ‘3’படத்தை மனதில் வைத்துக் கொண்டு இதைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.முழுக்க காதலைச் சுற்றியே ‘3’ படம்இருந்தது. ஆனால்,‘வை ராஜா வை’ காதல் படம் அல்ல. இதை சூதாட்டம் பற்றிய படமென்று எல்லீரும் நினைக்கிறார்கள்  படத்தில் சூதாட்டமும் இருக்கும் ஆனால் முழுக்க அதைப்பற்றிய படம் அல்ல.

“ பெண் இயக்குனர்கள் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற கருத்து மக்கள் மனதில் இருக்கிறது. அதை மாற்றும் படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.

“எனக்கு எப்போதுமே உளவியல் சார்ந்த  விஷயங்களில் அதிக ஆர்வம். அதன் அடிப்படையில்தான் 3 படத்தின் கதையை அமைத்திருந்தேன். இந்தப் படத்திலும் ஒரு விஷயத்தை கையாண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இந்த கதை வித்தியாசமானது.

இந்தப்படத்தில் என் கணவர் தனுஷ் கெளரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதைக் கடைசிவரை ரகசியமாக வைத்திருக்க நினைத்தோம், உதவி இயக்குனர்கள் ஆர்வ மிகுதியால் அதை வெளிப்படுத்திவிட்டார்கள். அதனால் அதற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த  இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வை நடிக்க வைத்து  ஒரு பாடலைப் படம்பிடித்திருக்கிறோம்.

“ஏ.ஜி.எஸ். பட நிறுவனத்தார் என்மேல் நம்பிக்கை வைத்து கதைக்குத் தேவையான செலவைத்  தாராளமாகச்  செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப்படத்தை வெற்றிப்படமாக்கிக் கொடுப்போம்  என்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ்.

Leave a Response