
விலைமதிப்புமிக்க இரிடியம் என்கிற உலோகத்தைக் காட்டி மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை விளக்கமாகச் சொல்கிற படம். ஐந்துகோடி கொடுத்து இரிடியத்தை வாங்குங்கள் அது இருபதுகோடிக்கு விற்கலாம் என்று சொல்வதை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாறுகிறவர்கள் இக்காலத்திலும் இருக்கிறார்கள். அவற்றையே திரைக்கதையாக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படமாகவும் இது அமைந்திருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் தாழைக்குடி என்கிற ஊரைக் கதைக்களமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப்பகுதியில் வசிக்கும் ஒருவர் வசியக்கலையைக் கற்றுக்கொண்டு அதன்மூலம் மக்களை ஏமாற்றுகிறார். அந்த ஊர் காவல்நிலையத்துக்குப் காவல்ஆய்வாளராக வருகிற நாயகன் மோகன்குமார், யாராலும் நெருங்கமுடியாத அவர்களை எப்படி வெல்கிறார்? என்பதுதான் படம்.
படத்தின் தொடக்கத்திலேயே இரிடியம் என்கிற உலோகத்தின் பயன்பாடு மற்றும் அதன் இப்போதைய மதிப்பு ஆகியனவற்றை விளக்கிவிட்டு படத்தைத் தொடங்குகிறார்கள்.
காவல்ஆய்வாளராக நடித்திருக்கும் மோகன்குமார், உண்மையான காவல்அதிகாரி போலவே விறைப்பாக இருக்கிறார். இதுபோன்ற காவல்அதிகாரிகள் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்படுகிற அளவில் அவருடைய வேடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
விஜய்ஆதிக், ஆருஷி ஆகியோர் படத்தில் இருக்கிற காதல்ஜோடி. இவர்கள் ஒரு பாடலாவது பாடிவிடுவார்கள் என்று கடைசிவரை எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். பாடலே இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆருஷி நன்றாக இருக்கிறார், தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீ யார் என்று தரகரை மிரட்டும் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார்.
நகைச்சுவைநடிகர் யோகிபாபு படத்துக்குப் பலமாக இருக்கிறார். இரண்டாயிரம்கோடியை வங்கியில் போட்டுவிடுங்கள் ஆயிரம்கோடியைக் கையில் கொடுத்துவிடுங்கள் என்று அவர் செய்யும் அலப்பறை சிரிக்கவைக்கிறது. அவருக்கு ஜோடியாக வருகிற மதுமிதா (ஒருகல்ஒருகண்ணாடி படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்திருந்தவர்) வருகிற காட்சிகளும் கலகலப்பாக நகருகின்றன.
விஜய்ஆதிக்கின் தந்தையாக நடித்திருக்கும் பாவாலட்சுமணனின் வெளிநாட்டுப்பயணமும் அதன் பின்விளைவுகளும் சிரிக்கவைப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னால்தான் தெரியும்.
பவர்ஸ்டார்சீனிவாசன் கும்கிஅவின் அகிய இருவரும் அண்ணன் தம்பிகள். அவர்களும் கொஞ்சநேரம் வந்து சிரிக்கவைக்க முயல்கிறார்கள். இந்தப்படத்திலும் சீனிவாசனை இஷ்டத்துக்கு ஓட்டுகிறார்கள். அவரும் எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.
வசியக்கலை தெரிந்த வில்லனின் வசியத்திலிருந்து தப்பி அவனைப் பிடிப்பதற்காக காவல்துறையினர் எல்லோரும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமம் மற்றும் திருநீறைப் பூசிக்கொள்ளும் காட்சிதான் உண்மையிலேயே பெரிய நகைச்சுவை. இந்தக்காலத்தில் மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடிய இப்படிப்பட்ட காட்சிகளை வைக்கலாமா என்று இயக்குநர் சிந்திக்கவேண்டும்.
கோபிசபாபதியின் ஒளிப்பதிவு உறுத்தாமல் படத்துக்குப் பலமாகவும் அமைந்திருக்கிறது. கோபாலின் பின்னணிஇசையும் தாழ்வில்லை.
எழுதி இயக்கியிருக்கும் ஷாய்முகுந்தன் எடுத்துக்கொண்ட கதை இக்காலத்தில் மக்களுக்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் பல சுவாரசியங்களைச் சேர்த்திருந்தால் மிகவும் கவனிக்கப்படக்கூடிய படமாக மாறியிருக்கும். கடைசியில் வருகிற மூடநம்பிக்கைக் காட்சிகளை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.
