ஐபிஎல் அனுமதிச்சீட்டைக் கிழித்தெறியுங்கள் – பாரதிராஜா வேண்டுகோள்

தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்கான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழகமே கொந்தளிக்கும்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது. இந்தப் போட்டியை தமிழகத்தில் நடத்துவது இளைஞர்களை திசைதிருப்புவதற்கு நடத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதுதொடர்பாக பாரதிராஜா தலைமையிலான, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம் ஒற்றுமையைச் சிதறடித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் திரளும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் எனும் சூழ்ச்சியை அனைவரும் புரிந்துகொண்டு ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியை தடுத்துநிறுத்தி வென்றெடுக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்கிவிட்டோமே என நினைக்காமல் நமக்கு உணவிடும் விவசாயிகளுக்காக அதைக் கிழித்தெறியுங்கள். பார்வையாளர் இன்றி விளையாட்டுப் போட்டியை நடத்திக்கொள்ளட்டும்.

எனவே, நமக்கு வேண்டியது காவிரி மேலாண்மை வாரியம். அதற்காகக் கட்சிகளாக, தனித்தனி இயக்கங்களாக, அமைப்புகளாக பிரிந்துகிடக்கின்ற அனைவரும் அவரவர்களின் அடையாளங்களை ஒதுக்கிவைத்துவிட்டு விவசாயிகளுக்காக நம் காவிரி அன்னைக்காக ஒன்றுபடுங்கள். உரிமையை வென்றெடுப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response