காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான போட்டியை நடத்தக்கூடாது என்றும், இது போராட்டத்தின் கவனத்தை திசை திருப்பும் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
போட்டிக்கு அனுமதி வழங்கக் கூடாது என சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
திருமாவளவன், வேல்முருகன், சீமான், ரஜினி உள்ளிட்ட பலர் சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர், ஆனால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.
சேப்பாக்கம் மைதானத்தில் நாளை திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். முதல் கட்டமாக மைதானத்தைச் சுற்றி தினமும் 50 போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மைதானத்துக்குள் செல்ல வீரர்கள், ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். வேறு யாரும் மைதானத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மைதானம் இருக்கும் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
போட்டி நடக்கும் நேரத்தில், சுமார் 3 ஆயிரம் காவல்துறையினர் மைதானம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர். போட்டியைக் காண வரும் ரசிகர்களும் முழு சோதனைக்கு பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எவ்வித மதிப்பும் இல்லாமல் சென்னையில் போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டி நடக்கும்போது என்ன நடக்குமோ? என்கிற பதட்டம் ஏற்பட்டுள்ளது.