ஜெ வழக்கின் தீர்ப்பு தள்ளிப்போவதால் திரைத்துறையினர் மகிழ்ச்சி. எதனால்?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தள்ளிப்போகும் என்பது கர்நாடகஉயர்நீதிமன்ற பதிவாளர் பேட்டியில் தெரிகிறது. இதுகுறித்து அவர், “ஒரு முக்கியமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அது சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்குவது மரபல்ல” என்று சொல்லியிருக்கிறார். இதனால் இன்னும் ஓரிருநாட்களில் தீர்ப்பு வரும் என்கிற நிலை மாறியிருக்கிறது.
அந்தத் தீர்ப்பு தள்ளிப்போகிறது என்கிற செய்தி அரசியல்கட்சிக்காரர்களைவிட திரைத்துறையினருக்கு அதிகமகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மணிரத்னம் மற்றும் ராகவாலாரன்ஸ் ஆகிய இருவரும் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். ஏனெனில் அவர்களுடைய படங்கள் இந்தவாரம் வெளியாவதுதான். மணிரத்னம் இயக்கிய ஓகாதல்கண்மணி மற்றும் காஞ்சனா2 ஆகிய இரண்டுபடங்களும் ஏப்ரல் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் தேதியை அவர்கள்தாம் முடிவுசெய்தார்கள் என்றாலும் ஏப்ரல் 16 அல்லது 17 க்குள் தீர்ப்பு வெளிவந்து, அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கான தண்டனை உறுதிப்பட்டுவிட்டது என்றால் ஓரிருநாட்கள் தமிழகம் இயல்புவாழ்க்கையைத் தொலைத்துவிடும். அதில் முதலில் பாதிக்கப்படுவது திரைரயங்குகள்தாம். இதனால் படம் வெளியாகி முதல்மூன்று நாட்களுக்குள் வசூலைப் பார்த்துவிடவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிற திரைத்துறையினருக்கு முதல்நாளே படம் தடைபடுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.
அதனால் வெளியீட்டுத் தேதி குறித்துவிட்டு விமரிசையாக விளம்பரங்கள் செய்துகொண்டிருந்தாலும் உள்ளுக்குள் ஒருவித பதட்டத்துடனேயே இருந்தார்களாம். காஞ்சனா 2 படத்துக்கான விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 3 கோடி வரை செலவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அதிகப்பதட்டம் இருந்திருக்கிறது. இப்போது தீர்ப்பு தள்ளிப்போகும் என்கிற செய்தி அவர்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Leave a Response