ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – முதன்முறை பேசிய சசிகலா

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சம்மன் அனுப்பப்பட்ட பலரும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களது வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ம் ஆண்டு நீதிமன்றம் ஜெயில் தண்டனை அளித்ததில் இருந்தே மன அழுத்தம், கவலை காரணமாக ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சைகள் பெற்று வந்தார். அவரால் அதிகமாக நடமாட முடியாது என்பதால் தான் ஆர்.கே. நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.

2016 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்தே அவருடைய உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவருடைய உடலில் சர்க்கரையின் அளவு அடிக்கடி அதிகரித்து வந்தது.

ஒரு நீரிழிவு நிபுணரும், ஒரு தோல் நிபுணரும் அவரை பரிசோதித்து குறைந்த அளவிலான ‘ஸ்டிராய்டு’ மாத்திரைகளை சாப்பிட பரிந்துரைத்தார்கள். இதில் அவருடைய உடல்நிலை சற்றுத் தேறியது. ஆனால் செப்டம்பர் 19-ந்தேதி அவருக்குக் காய்ச்சல் ஆரம்பித்தது. ஆனாலும் 21-ந்தேதி அவர் பொது நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார்.

2016 செப்டம்பர் மாதம் 22-ந்தேதி இரவு 9.30 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் முதல்மாடி அறையில் இருந்தார். அப்போது திடீரென என்னை வரும்படி அழைத்தார். நான் சென்று பார்த்தேன். அப்போது ஜெயலலிதா குளியல் அறையில் இருந்தார். இரவில் பல் துலக்குவதற்காக அங்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காகத்தான் என்னை உடனடியாக அழைத்தார். நான் அங்கிருந்து அவரை படுக்கைக்கு அழைத்து வந்து படுக்க வைத்தேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிட்டார்.

உடனே எனது உறவினரும், டாக்டருமான கே.சிவக்குமாரை அழைத்தேன். அவர் வந்து பார்த்தார். பின்னர் 2 பாதுகாப்பு அதிகாரிகளையும், டிரைவரையும் அழைத்தோம்.

டாக்டர் சிவக்குமார் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரி துணை சேர்மன் பிரீத்தா ரெட்டியின் கணவர் விஜயகுமார் ரெட்டிக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். உடனே தேனாம்பேட்டை அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்து 2 ஆம்புலன்ஸ்கள் போயஸ்கார்டனுக்கு வந்தன. 10-ல் இருந்து 15 நிமிடத்துக்குள் அவை அங்கு வந்துவிட்டன.

அப்போலோ ஆஸ்பத்திரி குழுவினர் ஜெயலலிதாவை படுக்கையில் இருந்து ஸ்டிரெச்சரில் ஏற்றினார்கள். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயலலிதாவுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். நான் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறினேன்.

அன்று காலையிலேயே ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. டாக்டர் சிவக்குமார் 2 தடவை அவருடைய உடலை பரிசோதித்தார். உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்று ஜெயலலிதாவிடம் கூறினார். ஆனால் ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு மறுத்துவிட்டார். அதன்பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செப்டம்பர் 22-ந்தேதியில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி வரை அவர் சிகிச்சை பெற்ற காலத்தில் பலர் அவரைப் பார்த்தார்கள். அக்டோபர் 22-ந்தேதி கவர்னர் வித்யாசாகர்ராவ் அவரைச் சந்தித்தார். ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் செப்டம்பர் 22-ந்தேதியில் இருந்து 27-ந்தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள்.

செப்டம்பர் 27-ந்தேதி 2-வது மாடி ‘மல்டி டிசிபிளனரி கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில்’ இருந்து தரைத் தளத்துக்கு ஸ்கேன் செய்வதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் சாமி ஆகியோர் ஜெயலலிதாவை பார்த்தனர்.

அவர்களிடம் ஜெயலலிதா நான் நலமாக இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். டாக்டர்கள் சில நாட்கள் மட்டும் என்னை இங்கு தங்கியிருக்கச் சொல்லி இருக்கிறார்கள். விரைவில் வீட்டுக்குச் செல்வேன் என்று கூறினார்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓ. பன்னீர்செல்வம், தம்பிதுரை, விஜயபாஸ்கர் மற்றும் கட்சித் தலைவர்களும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அக்டோபர் 22-ந்தேதி கவர்னர் வந்தபோது கண்ணாடிக்கு வெளியே நின்றபடி கவர்னர், ஜெயலலிதாவைப் பார்த்தார். அப்போது கவர்னரை பார்த்ததும் ஜெயலலிதா தனது கையைத் தூக்கி அசைத்தார். இந்தத் தகவலை கவர்னர் எழுதியுள்ள ‘தோஸ் ஈவன்ட்புல்டேஸ்’ என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்.

நவம்பர் 19-ந்தேதி ஜெயலலிதாவை தனி அறைக்குக் கொண்டு சென்றபோது, அமைச்சர் நிலோபர் கபிலும் மற்றும் சில மந்திரிகளும் பார்த்தார்கள்.

இவ்வாறு சசிகலா பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவருடைய அனுமதியின் பேரில் வீடியோ படம் எடுத்ததாக கூறி அதையும் பிரமாண பத்திரத்துடன் நீதிபதியிடம் தாக்கல் செய்துள்ளார். அதில் 4 வீடியோக்கள் இருக்கின்றன.

அதுபோல, 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பான வீடியோ ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகளை தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்தக் குறிப்புகள் தற்போது போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ஜெயலலிதா அறையில் இருப்பதாகவும் சசிகலா கூறியுள்ளார்.

செப்டம்பர் 27-ந்தேதி ஜெயலலிதா காவிரி பிரச்சினை கூட்டம் தொடர்பாக அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ராமலிங்கம், வெங்கட்டரமணன் ஆகியோரிடம் ஆலோசித்து வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும் சசிகலா பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா 2014-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுவரை சென்னை, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்கள் 20 பேரிடம் சிகிச்சை பெற்றதாகவும், அதற்கான பட்டியலையும் நீதிபதியிடம் கொடுத்துள்ளார்.

Leave a Response