ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக இந்த ரத யாத்திரை இன்று தமிழகம் வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரபட்டது.
அப்போது ஸ்டாலின் பேசுகையில், ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி பேசுகையில், ”சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரத யாத்திரை விவகாரத்தில் தேவையில்லாமல், அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்” எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.