சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது– திரைப்பட விமர்சனம்.

பாபிசிம்ஹா, பிரபஞ்செயன், லிங்கா ஆகியோர் அறைத்தோழர்கள். இவர்களில் இருவர் திரைப்படத்துறையில் இயக்குநராகிவிடவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மென்பொருள்துறையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கூடவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களை அறைக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருக்கிறார். இவர்கள் வாழ்க்கைப்பயணம்தான் படத்தின் திரைக்கதை.

சென்னையில் திருமணமாகாத இளைஞர்களின் தங்குமிடத்துக்கான போராட்டத்தைப் பலவகைகளில் படம் முழுவதும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் தொடங்கியவுடன் குடித்துவிட்டு மாடியிலிருந்து கீழே பேசிக்கொண்டிருக்கும் வீட்டுஉரிமையாளர் மீது சிறுநீர் கழிப்பதெல்லாம் அதீதமான கற்பனை என்று சொல்லலாம். உண்மையில் இப்படி நடந்திருக்கிறதென்றும் சொல்கிறார்கள். திடீரென இருக்கிற அறையை காலிசெய்யச் சொல்லிவிட்டால், அன்றிரவு தங்குவதற்கு இளைஞர்கள் படும்பாடு வேதனைக்குரியது.

பல்வேறு பொருளதாரநிலையிலுள்ளவர்கள் அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெண்பித்தரான கார்த்திக், வினோதினி காதல் அதன் விளைவுகள் ஆகியன இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நல்லபாடம். அவர்களின் காதல் மற்றும் அதற்குப்பிறகான காட்சிகள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன. பாபிசிம்ஹா ஒரு கதையை எழுதி முடித்து இயக்குநராகி விடவேண்டும் என்று முயல்வதும் அது தடைபட்டுக்கொண்டே போவதும் ரசிக்கிறமாதிரி இருக்கிறது.

புதியவீட்டுக்கான பெரும்பகுதி முன்பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டவர் கவிழ்த்துவிட புதியவீட்டில் பாபிசிம்ஹா படுகிற கஷ்டங்கள், குறிப்பாக இன்னொரு நண்பரின் அறைக்குப்போய் கொசுக்கடியில் அவதிப்படும் காட்சிகள் வேதனையை ஏற்படுத்துகின்றன. அதன்பின்னர் பாபிசிம்ஹாவுக்கு வீட்டுஉரிமையாளர் பெண்ணிடம் காதல் வருவதும் அந்தக்காதலை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தெரிவித்துவிட்டு அவரைப் பார்க்க முடியாமல் பதுங்குவதும் நன்றாக இருக்கிறது.

நாகராஜ் என்கிற பாத்திரத்தின் வடிவமைப்பு வரவேற்புக்குரியதாக இருக்கிறது. அண்ணன்மகனுக்கு மிதிவண்டி வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு அதை வாங்கித்தரமுடியாமல் அவர் தவிப்பதும், நண்பன் ஒரு பெண்ணை ஏமாற்றுகிறான் அதற்கு மற்றவர்கள் துணைபோகிறார்கள் என்பதைப் பொறுக்கமுடியாமல் நண்பனைக் காட்டிக்கொடுப்பது கடைசியில் அவர்கள் இருவரும் சேருவதற்கான காரணமாக இருப்பதென்று எல்லாவகையிலும் அந்தப்பாத்திரம் வரவேற்புப் பெறுகிறது.

இயக்குநர் மருதுபாண்டியனும் நடித்திருக்கிறார். அவருடைய வேடமும் அதன்தன்மையும் மிகஇயல்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார். ஆனால் அது இந்தப்படத்தின் திரைக்கதைக்குப் பலமளிக்கவில்லை. சென்னையிலுள்ள இளைஞர்கள் தாம் கஷ்டப்பட்டாலும் இதுபோன்று வருகிறவர்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவே இவருடைய பாத்திரம் இருக்கிறதென்று சொன்னால் அதற்கு இது தேவையில்லை என்றே சொல்லலாம்.

பாபிசிம்ஹாவின் கதை எழுதும் முயற்சி, பிரபஞ்செயனின் காதல் மற்றும் அதற்குப் பிறகான சிக்கல்கள் ஆகியனவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு தெளிந்த நீரோடை போலத் திரைக்கதை அமைத்திருக்கலாம். ஆனால் போகிற போக்கில் எல்லாம் திரைக்கதை போய்க்கொண்டேயிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.

என்ன நடந்தாலும் மதுக்குடிப்பது மட்டும் தொடருவதும், பலமுறை, நண்பர்களிடம் உன் அறையில் தங்கிக்கொள்ளவா என்று கேட்டுக்கொண்டேயிருப்பதையும் மட்டும் குறைத்துவிட்டால் அரைமணிநேரப்படம் குறைந்துவிடும். முதன்முறை பார்க்கும்போது ரசிக்கிற அதுபோன்ற காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது பலவீனம்.

வினோத்ரத்னசாமியின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. பத்துக்குப்பத்து அறைக்குள்ளும் இயல்பாகப் படம்பிடித்திருக்கிறார். கார்த்திக்நேத்தாவின் பாடல்வரிகள் கவனிக்கவைக்கின்றன.

திரைப்படக்கனவு, வேலைவாய்ப்புக் கனவு ஆகியனவற்றைச் சுமந்துகொண்டு சென்னைக்கு வரும் இளைஞர்களின் வாழ்க்கையை அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து படமாக்கியது போன்ற உணர்வைத் தருகிறது இந்தப்படம்.

 

Leave a Response