மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தற்போது ‘கிணர்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் தமிழில் ‘கேணி’ என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இதில் பசுபதி, பார்த்திபன், நாசர், ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனுஹாசன் மற்றும் ஜெயப்ரதா என தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் நடிக்கின்றனர்
முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எம்.ஏ.நிஷாத் பேசும் போது, “மலையாளத்தில் “கிணறு” எனது ஏழாவது படம், தமிழில் “கேணி” என் முதல் படம். எனது முந்தைய படங்களைப் போலவே கேணியும் சமூகம் சார்ந்த படம் தான். இந்த பூமியில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் பொதுவான தண்ணீரை, மனிதன் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்வியை கேணியின் வாயிலாக எழுப்பியிருக்கிறேன். வெயில் மழை எல்லாம் இயற்கை தந்தது, வறட்சி மனிதனால் உண்டாக்கப்பட்டது. இந்தப் படம் நிச்சயமாக எல்லோராலும் பேசப்படக்கூடிய படமாக கண்டிப்பாக இருக்கும்” என்றார்