எஸ்.வி.சேகர்,எச்.ராஜா போன்றோர் வைரமுத்துவை இகழ இதுதான் காரணம்

கவிஞர் வைரமுத்துவிற்கு
ஒரு பாமரனின் கடிதம்
======================

அன்பான கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு, வணக்கம்.

‘கவிப்பேரரசு’ என்று அழைக்கவில்லையென்று உங்கள் ரசிகப்பெருமக்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். வாழ்வியல் விழுமியங்களை பாடல்களாய் தந்து தமிழர்களின் நெஞ்சத்தில் குடியேறி விட்ட சிறுகூடல்பட்டிக்காரனையே கவியரசு தான் இன்றளவும் அழைக்கிறோம். ஆகவே, நீங்கள் இப்படி அழைப்பதால் பிழை கொள்ளமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். கடிதங்களின் நீளங்களைக் கண்டு ஒருபோதும் அயரமாட்டீர்கள் என்றே இந்த கடிதத்தை கொ……….ஞ்சம் நீளமாக எழுதி விட்டேன்.

பட்டங்களும், பெருமிதங்களும் கொண்ட வாழ்க்கையை நோக்கி ஏற சறுக்கி விழுந்தவர்கள் நிறைய பேர். அத்தகைய வாழ்வுக்கான தொடர் தேடல் தான், எஸ்வி.சேகர் போன்ற நபரெல்லம் உங்களை இகழ்வதற்கு காரணமாகி விட்டது என்று எழும் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

விருதுகள் மீதான பிரேமை
========================

இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மபூஷன், சாகித்ய அகாதமி, ஏழுமுறை தேசிய விருது, கலைமாமணி என அத்தனை பட்டங்களும், விருதுகளும் வாங்கிக் குவித்தவர் நீங்கள். ஆனால், அகிலன், ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீட விருது தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. நீண்ட நாட்களாகவே அந்த விருது மீது உங்களுக்கு பிரேமை உண்டு.

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உங்களது ‘மூன்றாம் உலகப்போர்’ நாவலுக்கு டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அற வாரியம் வழங்கும் சர்வதேச இலக்கிய விருது வழங்கப்பட்டது. மலேசியாவில் நடைபெற்ற இவ்விழாவில் ஞானபீடம் பரிசு மீதான தங்கள் வேட்கையை வெளிப்படுத்தினீர்கள்.

” இலக்கியப் படைப்புகளுக்கு இந்திய அளவில் வழங்கப்படும் உயர்ந்தபட்ச விருதாக ஞானபீடம் கருதப்படுகிறது. உலகத் தரம் வாய்ந்த படைப்பாளிகள் தமிழில் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் ஞானபீடம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உரிய உயரங்களை இன்னும் வழங்கவில்லை என்பதே என் ஆதங்கம். தமிழுக்கு இரண்டுதான். நமது சகோதர மொழியான கன்னடம் எட்டு ஞானபீட விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்தி மொழியை அது ஆறு முறை அலங்கரித்திருக்கிறது. மலையாளம் ஐந்து ஞானபீட விருதுகளைப் பெற்றிருக்கிறது.

சமரசம் தேவையா?
==================

ஆனால், உலகச் செம்மொழி என்று செம்மாந்து பேசப்படும் தமிழ் மொழிக்கு இதுவரை இரண்டே இரண்டு ஞானபீடங்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆதங்கம் என் உள்ளத்தை அழுத்திக் கொண்டேயிருக்கிறது. சர்வதேச அங்கீகாரம் இதற்கு ஆறுதலாகவோ என்னவோ டான்ஸ்ரீ கேஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், நான் எழுதிய இந்த நாவலுக்கு விருதளித்துத் தமிழுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது” என்று நீங்கள் பேசினீர்கள்.

ஞானபீடம் என்பது ஒரு பத்திரிகையை நடத்தும் குடும்பத்தினரால் 5 லட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் சிலை என்ற புரிதல் வந்திருந்தால், இத்தகைய கொலைமிரட்டல்களோ, அநாகரீகப் பேச்சுக்களை சிலுவையாக நீங்கள் சுமக்க நேர்ந்திருக்குமா?

ஆனால் மத்திய ஆட்சியாளர்களுடன் நீங்கள் செய்து கொண்ட சமரசம் தான், ‘உங்கள் நாக்கையும், உயிரையும் எடுக்க வேண்டும்’ என
பண்டாரம், பரதேசி என கலைஞர் கருணாநிதியால் இகழப்பட்ட முகவரியில்லாதவர்களைத் தைரியமாக பேச வைத்துள்ளது. தமிழுக்கு நீங்கள் வழங்கிய கொடையை அறியாதவர்கள் அவர்கள். உங்கள் உயரங்களை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு முதுகெலும்பற்றவர்கள். ” அடிப்படை தமிழ்கூட தெரியவில்லை…. வைரமுத்து காசுக்காக என்ன வேண்டுமானலும் எழுதுவார்” என்று சொல்லும் அளவிற்கு துணிவைக் கொடுத்துள்ளது.

நீங்கள் ஆண்டாள் குறித்து பேசிய பேச்சுகள் சர்ச்சையாக்கப்பட்டதை நானறிவேன். அதற்கு,” தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன், அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயின்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்” என்ற உங்கள் விளக்கத்தை கேட்க அவர்கள் செவிகள் தயாராக இல்லை.

வெறியூட்டும் பேச்சுக்கு ஆதார சுருதி
=================================

மண்டைக்காடு கலவரத்திற்குப் பின் அப்படியான ஒரு கலவரத்தை தமிழகத்தில் உருவாக்க உங்களைக் கருவியாகப் பயன்படுத்துகிறீர்களோ என்ற ஐயத்தை பரிவாரச்சேனைகள் பேசும் பேச்சில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்காக உங்கள் மீது மத நம்பிக்கைக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழ் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சாதி ஒழிப்பிற்கு எதிராகவும், தீண்டாமைக்கொடுமைக்கு எதிராகவும் மதவெறிக்கு எதிராகவும் தந்தை பெரியார் கம்பீரமாக
தடி தாங்கிய மண்ணில், சூலாயுதங்களைக் கொண்டு ஊர்வலம் வரத் துடிப்பவர்கள், உங்கள் உயிருக்கு குறி வைத்துப் பேசுகிறார்கள். அவர்களின் இத்தகைய பேச்சுகளுக்கு காரணம் யார் என்பதை இப்போது யோசித்தீர்களா ?

நீங்கள் நடத்திய பாராட்டு விழாவும், ஒரு நூல் வெளியீட்டு விழாவும் தான் இத்தகைய ‘வெறிமுற்றிய’ பேச்சுகளுக்கு ஆதார சுருதியாக உள்ளதாக பலரும் கருதுகிறார்கள். அவ்வண்ணமே நானும்.

தமிழுக்கு எதிரானவர்கள்
=======================
இந்தியாவின் செவ்வியல் மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பேசிய பாஜகவைச் சேர்ந்த தருண் விஜய் எம்பிக்கு நீங்கள் நடத்திய பாராட்டு விழா ஞாபகம் இருக்கிறதா ? தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் மீது கிஞ்சித்தும் அக்கறையில்லாத மத்திய அரசில் உள்ள ஒருநபரால் தமிழுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விடுமா? திமுக அரசு கொண்டு வந்த இரு மொழிக்கொள்கை மற்றும் பள்ளிகளில் தமிழ் மொழிக் கல்விக் கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக, இந்தி மயமான பள்ளிகளை அமைக்க தொடர்ந்து பாஜக முயன்று வருகிறது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, ” ஐ.நா மன்றத்தில் இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வருவோம்” என்று மக்களவையில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியுள்ளார். குரங்கு எப்போதும் தன் குட்டியை விட்டுத்தான் ஆழம் பார்க்கும். தமிழ் மீதும், வள்ளுவத்தின் மீதும் தருண்விஜய் எம்பிக்கு ஏற்பட்டது காதல் என்று சொல்லி விட முடியுமா?
அடுத்ததாக, பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்த்து ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட போது நீங்கள் என்ன பேசினீர்கள் என்று நினைவிருக்கிறதா உங்களுக்கு ?

பீடத்தை நோக்கிய பயணம்
===========================
” இந்திய பிரதமர் மோடியை நான் 3 காரணங்களுக்காக பாராட்டுகிறேன். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியைத் தேடிப்போய் நலம் கேட்டார் மோடி. அந்த அரசியல் பண்பாட்டுக்கு என் முதல் பாராட்டு. நட்டுவைத்த வேலுக்கு பொட்டுவைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமனை இந்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக நியமித்திருக்கிறார். இந்திய பெண் குலத்திற்கு பெருமை சேர்த்தற்காக என் இரண்டாம் பாராட்டு. இன்று வெளியிடப்படும் இந்த நூலுக்கு நரேந்திர மோடியின் கவிதைகள் என்று பெயர் சூட்டாமல் ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். அந்த இலக்கிய நேர்மைக்கு என் மூன்றாம் பாராட்டு” என்று நீங்கள் பேசினீர்கள்.

” இந்த சிந்தனைக் கவிதைகளுக்குள் நான் ஒரு பிரதமரை பார்க்கவில்லை. இதயம் உள்ள மனிதனைப் பார்க்கிறேன். இயற்கையின் காதலனைப் பார்க்கிறேன். நல்லிணக்கம் பேணத்துடிக்கும் ஓர் நல்லுள்ளத்தைப் பார்க்கிறேன். நர்மதை நதியை குஜராத்தின் கைரேகை என்று காணும் ஒரு கவிஞனைப் பார்க்கிறேன். ஒரு கவிஞனுக்குள் இருக்கும் ஒரு தலைவன் விமர்சனத்திற்கு உட்பட்டவன். ஆனால், ஒரு தலைவனுக்குள் இருக்கும் கவிஞன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். கவிஞர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன்” என்று கவிஞரே நீங்கள் பேசியது எதற்காக?

மாலைகளுக்கு நடுவே உலா வரும் கழுத்துக்களை எப்போதும் ஆடுகள் விரும்புவதில்லை. ஆனால், புகழ்மாலைகளை எப்போதும் சூட்டி மகிழும் விரும்பும் உங்களுடைய குணாதிசயம், காவிமேடைகளில் கரைய நினைப்பது பீடங்களைப் பிடிப்பதற்குத் தான் என்று எழுந்த விமர்சங்களை எப்போதாவது விரல் கொண்டு தவிர்த்திருக்கிறீர்களா?

துணை நிற்போம்
==============

தமிழகத்தில் லட்சக்கணக்கான கவிஞர்களின் மனதில், கவிதைக் கல்லெறிந்த உங்கள் மீது விழும் சொல்லம்புகளை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாபர்மசூதி இடிப்பைக் கண்டித்து நீங்கள் எழுதிய கவிதைகளை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மதவாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

உங்கள் கவிதையின் கனத்தில் மனம் லேசாகும். உங்கள் சொற்களின் கனத்தில் காற்றுவெளி சூடாகும். பாமரக்கவிஞனான நான் உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் இது தான். கருப்பு எப்போதும் கருப்பு தான். காவி அதற்குள் என்றும் கரையாது. தலைமுறை தாண்டிய உங்கள் கவிச்செல்வத்தை பீடங்களுக்குள் அடகு வைக்காதீர்கள். இப்போதல்ல… எப்போதும் நாங்கள் உங்கள் அரணாக இருப்போம்.

நன்றி.
பாமரக்கவிஞன்
ப.கவிதா குமார்

Leave a Response